'ஸ்மார்ட் மீட்டர்' கொள்முதல் 'டெண்டர்' ஆவணங்கள் குவிந்ததால் திணறல்
'ஸ்மார்ட் மீட்டர்' கொள்முதல் 'டெண்டர்' ஆவணங்கள் குவிந்ததால் திணறல்
ADDED : செப் 07, 2025 01:02 AM
சென்னை:தமிழகத்தில், 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை செயல்படுத்துவதற்கான, 'டெண்டரில்' பங்கேற்ற சில நிறுவனங்கள், 9,000 பக்கங்களுக்கு ஆவணங்களை வழங்கியுள்ளன. இதனால், டெண்டரை விரைவாக இறுதி செய்ய முடியாமல், மின் வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
தமிழகத்தில் வீடு உட்பட, 3.04 கோடி மின் இணைப்புகளில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை, மின் வாரியம் செயல்படுத்த உள்ளது. இந்த மீட்டரில், மின் பயன்பாடு கணக்கெடுக்க வேண்டிய மென் பொருள் பதிவேற்றப்பட்டு, தொலைதொடர்பு வசதியுடன் அலுவலக, 'சர்வரில்' இணைக்கப்படும்.
இதன் வாயிலாக, குறித்த தேதி வந்ததும், தானாகவே கணக்கு எடுக்கப்பட்டு, நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு மின் கட்டண விபரம் அனுப்பப்படும்; ஊழியர்கள் நேரில் செல்ல வேண்டியதில்லை.
மாநிலம் முழுதும் ஆறு மண்டலங்களில், 3.04 கோடி மின் இணைப்புகளில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தி, அதை, 93 மாதங்களுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவ னத்தை தேர்வு செய்து, ஆறு தொகுப்புகளாக ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய, கடந்த மார்ச்சில், மின் வாரியம் டெண்டர் கோரியது.
திட்ட செலவு, 20,000 கோடி ரூபாய். டெண்டரில் பங்கேற்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அவகாசம் கடந்த மாதம், 5ம் தேதி பிற்பகல் முடிவடைந்தது. ஒவ்வொரு தொகுப்பிற்கான டெண்டரிலும், ஆறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
ஏற்கனவே, 2023ல், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய, டெண்டர் கோரப்பட்ட நிலையில், அதில் பங்கேற்ற நிறுவனங்கள், அதிக விலைப்புள்ளி வழங்கியதாக கூறி ரத்து செய்யப்பட்டது. இதனால் , ஸ்மார்ட் மீட்டர் திட்டம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
எனவே, சமீபத்தில் கோரப்பட்ட டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள் வழங்கிய தொழில்நுட்பம் மற்றும் விலை புள்ளி விபரங்கள் அடங்கிய ஆவணங்களை விரைவாக சரிபார்த்து, தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்து, ஒன்றரை மாதங்களுக்குள் பணி ஆணை வழங்க திட்டமிடப்பட்டது.
ஆனால், டெண்டரில் பங்கேற்ற சில நிறுவனங்கள், தொழில்நுட்ப புள்ளியில் வழங்கியுள்ள ஆவணங்கள், 9,000 பக்கங்கள் வரை இருப்பதாக தெரியவந்துள்ளது. அவற்றை படிக்க முடியாமல், அதிகாரிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஸ்மார்ட் மீட்டர் டெண்டர், அதிக மதிப்புடையது. அவசர கதியில் முடிவு எடுக்க முடியாது. டெண்டர் தொடர்பாக, அதிகாரிகளுக்கு ஏற்கனவே அனுபவம் உள்ளது.
'எனவே, இந்த டெண்டர் பணியில் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அடுத்த இரு மாதங்களுக்குள் தகுதியான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணை வழங்கப்படும்' என்றார்.