ADDED : ஏப் 04, 2025 02:13 PM

தேனி: பைக்கில் ஒளிந்திருந்த பாம்பு கடித்ததில் 21 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் பழைய ரைஸ் மில் பகுதியைச் சேர்ந்த மணி என்பவருடைய மகன், ஹரிஷ் (21). இவர் நேற்றிரவு தனது நண்பருடன் பைக்கில் பின்புறம் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கின் முகப்பு விளக்கு பகுதியில் ஒளிந்திருந்த பாம்பு ஒன்று, நண்பனின் கை மீது ஏறியுள்ளது. இதனால், பதற்றத்தில் அவர் கையை உதறியுள்ளார். அப்போது, அந்த பாம்பு பின்னால் அமர்ந்திருந்த ஹரிஷ் கையில் கடித்துள்ளது.
இதையடுத்து, அவரை உடனே கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டது. இருப்பினும், பாம்பின் விஷம் உடலில் தீவிரமாக பரவியதால், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் சிறிது நேரத்திலேயே ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

