ADDED : நவ 08, 2024 09:51 PM
சென்னை:பாம்புக்கடி குறித்தும், அதனால் ஏற்படும் இறப்புகள் குறித்தும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயமாகி உள்ளது. இதற்காக, பாம்புக்கடியை, 'அறிவிக்கத்தக்க நோய்கள்' பட்டியலில் சேர்த்து, அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் 2030க்குள் பாம்புக்கடி இறப்புகளை பாதியாக குறைப்பதற்கான வழிமுறைகளை, மத்திய அரசு வகுத்துள்ளது.
அந்த அடிப்படையில், பாம்புக்கடியை அறிவிக்கத்தக்க நோயாக வகைப்படுத்தி, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹு அரசாணை வெளியிட்டுள்ளார்.
பாம்புக்கடியை அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக மாற்றுவதன் காரணமாக, தரவு சேகரிப்பு, சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு, இறப்பை தடுப்பதற்கான விஷமுறிவு மருந்துகள் வழங்கல் மேம்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகள் குறித்த அறிக்கைகள் பெறப்படும்.
பாம்புக்கடி மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகள் குறித்த விபரங்களை, அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளும் அரசுக்கு தெரிவிப்பது கட்டாயமாகும். இது, பாம்புக்கடி தொடர்பான தடுப்பு மற்றும் சிகிச்சை உத்திகளுக்கு பயன்படும் சிறந்த தரவு சேகரிப்புக்கு உதவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.