ADDED : ஜன 05, 2026 04:52 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் மீண்டும் பனியின் தாக்கம் அதிகரித்து குளிர் நிலவுகிறது.
சுற்றுலா தலமான கொடைக்கானலில் சில வாரங்களுக்கு முன் உறை பனியின் தாக்கத்தால் கடுங்குளிர் நடுங்க வைத்தது. இருந்த போதும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு சில தினங்கள் சாரல், மிதமான மழை பெய்தது. இதனால் கொடைக்கானல், தாண்டிக்குடி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பனியின் தாக்கம் தணிந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மதியம் 3:00 மணிக்கு பனியின் தாக்கத்தால் குளிர் நிலவுகிறது. பகலில் அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், இரவில் குறைந்த பட்சமாக 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பதிவாகி வருகிறது.
இதற்கிடையே மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், கீழ் பூமி, அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலை 10:00 மணி வரை பனியின் தாக்கம் நீடிப்பதால் இயல்பு வாழ்க்கை தாமதமாக துவங்குகிறது. மாறுபட்ட சீதோஷ்ண நிலையால் மலைப் பகுதியினர் ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்படுகின்றனர்.

