பெரும் பிரச்னையாக வெடிக்கும் சமூக வலைதள வதந்திகள் டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் ஸ்டாலின் கவலை
பெரும் பிரச்னையாக வெடிக்கும் சமூக வலைதள வதந்திகள் டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் ஸ்டாலின் கவலை
ADDED : அக் 19, 2024 09:12 PM

சென்னை:சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் பெரும் பிரச்னையாக உருவெடுப்பதாக, தென்மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தென்மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்களின் ஒருங்கிணைப்பு மாநாடு, சென்னை கிண்டியில் நேற்று நடந்தது.
உறுதி
தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார், டி.ஜி.பி., சங்கர் ஜிவால், கர்நாடகா டி.ஜி.பி., அலோக் மோகன், கேரள டி.ஜி.பி., சேக் தர்வேஷ் சாகேப், புதுச்சேரி டி.ஜி.பி., ஷாலினி சிங், ஆந்திர டி.ஜி.பி., துவாரகா திருமல ராவ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில், தென் மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மாநிலங்களுக்கு இடையேயான குற்றச்செயல்கள், இணையவழி குற்றங்கள் போன்றவற்றில் இருந்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
குற்றங்களை எதிர்கொள்வதில், தமிழக போலீஸ் பல்வேறு முன்னேற்றங்கள் அடைந்திருக்கிறது. போதைப்பொருள் வினியோகம் மற்றும் விற்பனையை தடுக்க, கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
குற்றவாளிகளை கைது செய்வதற்கும், விசாரணை மேற்கொள்ளவும், உங்கள் மாநிலத்திற்கு வருகை தரும் தமிழக போலீசுக்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை.
சிக்கலான பிரச்னை
சமீபத்தில் கேரள போலீஸ் கொடுத்த தகவலை வைத்து, நாமக்கல் மாவட்டத்தில் ஏ.டி.எம்., பணத்தை கொள்ளையடித்த கும்பலை, தமிழக போலீஸ் வெற்றிகரமாக கைது செய்தது. இந்த பாராட்டுக்குரிய பணியை இணைந்து நிறைவேற்றிய தமிழக மற்றும் கேரள போலீசாரை வாழ்த்துகிறேன்.
இணையவழி குற்றம் என்பது பெருகி வரக்கூடிய மிகவும் சிக்கலான பிரச்னை. புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில், தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
கடந்த ஆண்டில் மட்டும், 1,390 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்; அவர்களில் பலரும் தமிழகத்துக்கு வெளியில் கைது செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
படித்து முடித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து, அவர்களை அடிமைகளாக, கணினிசார் குற்றங்களில் ஈடுபடுத்தும், 'சைபர் சிலேவரி' பிரச்னை தற்போது பெரிய அளவில் உருவெடுத்திருக்கிறது.
சில தென்கிழக்கு நாடுகளை அடிப்படையாக வைத்து செயல்படும் குற்றவாளிகளின் பிடியில் சிக்கி, இளைஞர்கள் பலர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.
தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை கையாளுதல் உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பின் முக்கிய கூறுகள் குறித்து விவாதிக்க, இந்த மாநாடு வழிவகுக்கிறது.
கடும் நடவடிக்கை
சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் பெரும் பிரச்னையாக இருக்கின்றன. அவற்றின் வாயிலாக, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை பார்க்க முடிகிறது.
பல மாநிலங்களில் இருந்து வதந்தி பரப்பியவர்களை கண்டுபிடித்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
சமூக வலைதளங்களில் வரும் வதந்திகள் பற்றியும், நாம் மிகுந்த கண்காணிப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நம் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும் இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பலமான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் வாயிலாக, சட்டம் - ஒழுங்கு, பொது அமைதி, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமாளித்து, அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய கடமையாற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற, தென் மாநில டி.ஜி.பி.,க்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பலரும், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு பூங்காவுக்கும், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கும் சென்று பார்வையிட்டனர்.