ADDED : ஜூலை 02, 2026 12:10 AM
கோவை: சமூக, பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கிய நிலையில், முதல் முறையாக இடம்பெயர்வு கணக்கெடுப்பு தனியாக நடத்தப்படுகிறது.
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம், சமூக, பொருளாதார கணக்கெடுப்பு பணியை நேற்று தொடங்கியுள்ளது.
அடுத்தாண்டு ஜூன் 30 வரை, மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், திருச்சி உட்பட, 13 மாவட்டங்களில் இப்பணிகள் நடக்கின்றன.
இந்த தரவுகள் மத்திய - மாநில அரசு திட்டங்களின் வளர்ச்சிக்கும், கொள்கை உருவாக்கத்திற்கும் உதவும் என்கின்றனர் தேசிய புள்ளியியல் அதிகாரிகள்.
மேற்கு மண்டல தேசிய புள்ளியியல் அலுவலக மூத்த புள்ளியியல் அதிகாரி ரவிச்சந்திரன் கூறியதாவது:
கடன் மற்றும் முதலீடு, விவசாயிகளின் நடப்பு நிலை குறித்து, மேற்கு மண்டலத்தில், 138 நகரங்கள், 142 கிராமங்களில் கணக்கெடுப்பு தொடங்கிஉள்ளது.
இடம்பெயர்வு கணக்கெடுப்பு தற்போது முதல் முறையாக தனியாக நடத்தப்படுகிறது.
இதற்கு முன், ஒருசேர தகவல்கள் சேகரிக்கப்பட்டு, 2019ல் இக்கணக்கெடுப்பு நடந்தது. குடும்பத்தில் இருந்து இடம்பெயர காரணம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட தரவுகள் சேகரிக்கப்படும்.
விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக்குதல் மற்றும் 2047க்குள் வலுவான பாரதத்தை உருவாக்குதல் ஆகிய நோக்கில் இப்பணிகள் நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
