தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/கீழடி காலடி மண்ணே..

கீழடி காலடி மண்ணே..

கீழடி காலடி மண்ணே..


ADDED : ஜன 15, 2024 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2024 05:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழடி காலடி மண்ணே...


வரிசை கட்டும் 'பண்பாட்டு' பிரமாண்ட


ஆதிப்பண்பாட்டின் அடிவேர்களாக 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் சமூகத்தின் ஆழமான தொன்மையை பறைசாற்றும் நிகழ்கால சாட்சி, கீழடி. ஆம்... நாகரீகம் எப்போது துவங்கியது என வரலாற்று ஆய்வாளர்கள் கணித்த காலத்திற்கு முன்பே எழுத்தறிவு, திட்டமிட்ட வேளாண்மை, நீர் மேலாண்மை, நகர வாழ்வு, உலக தொடர்புகள் என உயரிய நாகரிகத்தின் ஒட்டுமொத்த அடையாளமாக திகழ்ந்துள்ளது, நம் தமிழ் சமூகம். அதற்கான ஆயிரக்கணக்கான அடையாளங்களை தனக்குள்ளே புதைத்து வைத்துள்ள 'தாய்மடி'யே நாம் பெற்ற இந்த கீழடி பெருமை.

உலகில் பல நாடுகளில் ஆதிவாசிகளாக மக்கள் திரிந்தபோது அரசாங்கம் நடத்தியதும், மொழியே உருவாகாத காலத்தில் புலவர்களை கொண்டிருந்தத நம் மூத்த நாகரிகத்தின் பெருமையை, இன்றைய இளம் தலைமுறையினருக்காக தொன்மை மாறாமல் அதே அடையாளத்துடன் காட்சியாக்கப்பட்ட களமே கீழடி அருங்காட்சியகம்.

மதுரையில் இருந்து திருப்புவனம் செல்லும் ரோட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழடி. பத்து கட்டங்களாக நடத்தப்பட்ட ஆகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அரிய தொல்லியல் பொருட்களை செட்டிநாடு கட்டடக் கலை தொழில்நுட்பத்தில் ஆறு பிளாக்குகளில் 6 தலைப்புகளாக பிரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது தான் சுவராஸ்யமே.

வைகையும் கீழடியும்


முதல் பிளாக்கிற்குள் நுழைந்தவுடன் கீழடி அகழ்வாய் ஒட்டுமொத்தமாய் விளக்கும் வகையில் அகழாய்வுக் குழி, அங்குள்ள முதுமக்கள் தாழியின் பிரம்மாண்ட 'செட்' பிரமிக்க வைக்கிறது. தமிழகத்தின் 21 தொல்லியல் அகழ்வாய்வுகள் நடந்த முக்கிய இடங்களின் பிரமாண்ட வரைபடம் (மேப்) பரவசப்பட வைக்கிறது. ஆற்றங்கரையில் இருந்த நாகரீகம், வைகை ஆற்றங்கரையின் இடம் பெற்ற தொல்லியல் மேடுகளின் சிறப்புகள் புகைப்படமாகவும், வீடியோ காட்சிகளாகவும் பிரமிக்க வைக்கின்றன.

நிலமும் நீரும்


நிலமும் நீரும் அறைக்குள் நுழைவதற்கு முன் கீழடியின் சிறப்பை 15 நிமிடங்கள் வீடியோ படமாக அதிநவீன மினி தியேட்டரில் விரிகிறது. ஒட்டுமொத்த கீழடியும் நம் மனஅடியில் பதிந்துவிடுகிறது. இதை கடந்து சென்றால் தமிழர்களின் வீர விளையாட்டிற்கு அடையாளமான ஜல்லிக்கட்டு காளை சிலை, ஆக்ரோஷமாக திமிலை துாக்கி துள்ளிக்கொண்டு சீறும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அகழ்வாய்வில் கிடைத்த திமில் உள்ள காளையின் எலும்புக்கூடு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. பல்கலை மாணவர்கள் கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலம்சார்ந்த தொல்லியல் பொருட்களின் எச்சங்களின் ஆய்வு முடிவுகளும் இடம் பெற்றுள்ளது. நிலங்கள் வகைகள், கால்நடை வளர்ப்பு, வேளாண்மை, நீர் மேலாண்மை, தொழில்நுட்பம் என சிந்துவெளி பண்பாட்டின் தொடர்ச்சிகள் பரவசப்படுத்துகின்றன.

பிரம்மாண்டமான உறைகிணறு


சங்க காலத்தில் மக்கள் மண்பாண்டத் தொழிலில் எவ்வளவு நேர்த்தியான திறமையுடன் வாழ்ந்தனர் என்பதை அகழ்வாய்வுகளில் கிடைக்கப்பட்ட பொருட்களே சாட்சியாக உள்ளன. பலவிதமான மண்பாண்டங்கள் கருப்பு சிவப்பு நிறத்திலும், வெள்ளை பூச்சு பெற்ற பானை ஓடுகளும், கெண்டி மூக்குப் பானைகளும், செவ்வண்ண பூச்சுபெற்ற பானைகளும் இந்த அறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சங்ககால மக்களின் மண்பாண்ட தொழில் முறை பற்றிய அனிமேஷன் வீடியோவும் இந்த அறையை அழகூட்டுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளை கடந்தும் பளபளப்பு மாறவில்லை என்பது கூடுதல் அதிசயம்.

சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கல், கால்வாய் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. அகழ்வாய்வில் கிடைத்த செங்கல் கற்களையும் டிஸ்பிளே செய்துள்ளனர். பத்து அடுக்குகளை கொண்ட பிரம்மாண்டமான உறை கிணறும் டீப்பாய், சுருள் வடிவ சுடுமண் நீர் குழாய்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆடையும் அணிகலனும்


இந்த அறையில் மக்கள் பயன்படுத்திய கருவிகள் ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடப்பாறை, கத்தி, குறுவாள், ஈட்டி உள்ளிட்ட சிறிய வகை ஆயுதங்களும் இடம் பெற்றுள்ளன. இரும்பை உருக்குவது உள்ளிட்ட தொழில்நுட்பங்களை தெரிந்து வைத்திருத்தனர். பார்வையாளர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அதுதொடர்பான அனிமேஷன் காட்சிகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.

ஆடைகள், அழகுபடுத்திக்கொள்வதில் ஆர்வமாய் இருந்துள்ளனர் என்பது அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக பெண்கள் கூந்தலை அழகுபடுத்த யானை தந்தத்திலான சீப்பை பயன்படுத்தியுள்ளனர். கண்களுக்கு மை பூசிக்கொள்ள மென்மை தன்மை கொண்ட உலோகத்தாலான குச்சியை பயன்படுத்தியுள்ளனர். கண்ணாடி வளையங்களை பயன்படுத்தியுள்ளதற்கான உடைந்த நிலையிலான வளையல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நெசவு செய்தற்கான சான்றுகளும் கொட்டிக்கிடக்கின்றன.

கடல் வழி வாணிகம்


அப்போதே தமிழர்கள் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தை தெரிந்துவைத்திருந்தனர். அதை தெரிவிக்கும்வகையில் அன்றைய தொழில்நுட்பத்தில் செய்யப்பட்ட கப்பல் மாதிரி ஒன்றும் இந்த பிளாக்கில் இடம் பெற்றுள்ளது. செப்பு, வெள்ளிக் காசுகள், அகேட், சூது பவளம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற கல்மணிகளும் ஆய்வில் கிடைத்தன. அத்துடன் எடைக்கற்கள் சுடுமண் உருவங்கள் காதணி, வட்டச்சில் ஆட்டக்காய், சக்கரம், முத்திரை உள்ளிட்ட பொருட்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாழ்வும் வளமும்


வணிகம் செய்து பொருட்கள் ஈட்டி பல்வகை கலைகள் மூலம் பொழுதுபோக்கியதற்கான ஆதாரங்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. கல்வி, பொருளாதாரம், உணவு, வாழ்வியல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இந்த பிளாக்கில் வைக்கப்பட்டுள்ளன. சமைக்கவும், பிற பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட பல்வகை அளவுகளில் அரிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட மண் கலன்கள் பார்வையாளர்களை கவர்கின்றன. 60க்கும் மேற்பட்ட 'தமிழி' எனும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், 1500க்கும் மேற்பட்ட குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை அந்தகால மக்கள் வாழ்வியலை கண்முன் கொண்டுவருகின்றன.

ஒரு தமிழனாக ஒருமுறையாவது இந்த கீழடி 'தாய்மடி'யில் இளப்பாறி நம் முன்னோர்கள் தொடர்பான தொன்மைதோரணங்களை கண்டு ரசிப்பது பாக்கியம்.

..

எப்படி செல்லலாம்:


* மதுரையில் இருந்து திருப்புவனம் செல்லும் ரோட்டில் 11 கிலோ மீட்டர் துாரத்தில் கீழடி அருங்காட்சியகம் உள்ளது. மாட்டுத்தாணியில்இருந்து பஸ் வசதி உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா துறை சார்பில் பஸ், வாகன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

* பார்வையிடும் நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 - மாலை 6:00 மணி வரை/ சனி/ஞாயிறு: காலை 10:00 - இரவு 7:00மணி வரை.

- கொ.காளீஸ்வரன்

ஆர்.அருண்முருகன்

வி.சரவணகுமார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us