பலியான ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்
பலியான ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்
UPDATED : நவ 08, 2026 07:12 PM
ADDED : நவ 08, 2026 07:08 PM
ஜோலார்பேட்டை: இந்திய எல்லையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரி முத்துாரை சேர்ந்த ராணுவ வீரர் கோவிந்தராஜ், 30, உடல், 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்துாரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், 8 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் சேர்ந்து டிரான்ஸ்போர்ட் இன்சார்ஜ் மற்றும் துப்பாக்கி இன்சார்ஜ் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கிருத்திகா, 26, என்ற பெண்ணை திருமணம் செய்தார். தற்போது, 6 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த, 4ம் தேதி இந்திய எல்லை பகுதியான கார்கில் அடுத்த லே–லடாக் பகுதியில் பாலம் அமைக்கும் பணியில் கோவிந்தராஜ் ஈடுபட்டார்.
அப்போது மலையில் இருந்த வாகனம் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் வீரமரணம் அடைந்தார். நேற்று முன்தினம் இவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராணுவ வீரர்கள் புடை சூழ, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் இறுதி அஞ்சலி செலுத்தி, ஊர்வலமாக கொண்டு சென்று, 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் கோவிந்தராஜின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
