தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சாலமன் பாப்பையா காலமானார்

சாலமன் பாப்பையா காலமானார்

சாலமன் பாப்பையா காலமானார்

31


UPDATED : செப் 11, 2026 03:18 PM

ADDED : செப் 11, 2026 01:49 PM

Follow on GoogleFavourite on Google

31

UPDATED : செப் 11, 2026 03:18 PM ADDED : செப் 11, 2026 01:49 PM


31
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த பேராசிரியர் சாலமன் பாப்பையா, 90, காலமானார்.

மதுரையைச் சேர்ந்தவர் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவருக்கு வயது,90. இவர் தமிழகத்தின் புகழ்பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமாக இருந்து வந்தார். கடந்த சில தினங்களாக, வயது முதிர்வு காரணமாக உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (செப் 11) அவர் மதுரையில் காலமானார்; இவர் எளிய தமிழில் ஆழமான கருத்துக்களை பேசி பட்டிமன்றங்களை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர்.1936ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள சாத்தங்குடி கிராமத்தில் பிறந்தார்.

தமிழ்ப் பேராசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். திருக்குறளுக்கு எளிய முறையில் உரை எழுதி வெளியிட்டுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'முதல்வன்', 'பாய்ஸ்', 'சிவாஜி' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்களை நடத்தி வருகிறார். உலகளவில் ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்துள்ளார்.

தமிழ் இலக்கியச் சேவைக்காக இவருக்கு 2021ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இவரது மறைவு செய்து அறிந்து பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தலைவர்கள் இரங்கல்


கவர்னர் அர்லேகர்

பிரபல தமிழ் பட்டிமன்றப் பேச்சாளரும், தமிழறிஞரும், தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் சிறந்த பேச்சாளருமான சாலமன் பாப்பையா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தமது சிறப்பான பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் ஆழ்ந்த தமிழ் அறிவின் மூலம் பொதுமக்களின் சிந்தனையை வளப்படுத்தியதுடன், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சிறப்பை பல தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். அன்னாரின் மறைவு தமிழ் இலக்கிய மற்றும் பண்பாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள், அபிமானிகள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

முதல்வர் விஜய்


தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவர் ஸ்டாலின்:

சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் - மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.

திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா அவர்கள் திகழ்ந்தார்.

தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.

தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ்


தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த தமிழறிஞர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா.அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.

நடிகர் ரஜினிகாந்த்


படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us