ஆந்திரா, கர்நாடகா போல மாம்பழ பிரச்னைக்கு தீர்வு: தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுரை
ஆந்திரா, கர்நாடகா போல மாம்பழ பிரச்னைக்கு தீர்வு: தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுரை
UPDATED : ஜூன் 27, 2025 06:23 AM
ADDED : ஜூன் 27, 2025 01:28 AM

சென்னை: 'ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை பின்பற்றி, மாம்பழ விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழகத்தில், 3.60 ஏக்கரில் மாமரங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும், 9.50 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நடப்பாண்டு தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில், மாம்பழங்கள் அதிகளவில் விளைந்துள்ளன. அவற்றுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மாம்பழக்கூழ் தயாரிக்கும் பெங்களூரா ரக மாம்பழம், கடந்தாண்டு 20 முதல் 30 ரூபாய்க்கு ஆலைகளில் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு 4 ரூபாய்க்கு தான் வாங்கப்படுகிறது.
தமிழகத்தில், 10க்கும் குறைவான இடங்களில் மட்டுமே மாம்பழக்கூழ் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. அவற்றில் கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், தமிழக விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது. 'இந்த மாம்பழங்களுக்கு டன்னுக்கு, 7776 ரூபாய் என, கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இதில், மாம்பழக்கூழ் தயாரிப்பு தொழிற்சாலைகள் வாயிலாக டன்னுக்கு, 5000 ரூபாய்க்கு மாம்பழங்கள் கொள்முதல் செய்தால், 2766 ரூபாய் பற்றாக்குறை ஏற்படும். அதை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்த கடிதத்தை, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் கனிமொழி, வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் டில்லியில் வழங்கினர்.இது குறித்து, மத்திய வேளாண் துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் மாம்பழங்கள் அதிகளவில் விளைகின்றன. நடப்பாண்டு வடமாநிலங்களில் பெரிய அளவில் பிரச்னை இல்லை. தென் மாநிலங்களில்தான் மாம்பழ விற்பனையில் பிரச்னை தலைதுாக்கியுள்ளது.
கர்நாடகா, ஆந்திராவில், மாம்பழக்கூழ் தயாரிப்பு ஆலைகள் அதிகளவில் உள்ளன. இவற்றுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி ஊக்குவித்துள்ளது. தமிழக அரசு இதை பயன்படுத்தி, நேரடியாகவோ அல்லது தனியார் வாயிலாகலோ ஆலைகள் அமைப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதுவே பிரச்னைக்கு காரணம்.
கர்நாடகா, ஆந்திரா மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால், அங்குள்ள ஆலைகளில் மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள தனியார் ஆலைகளில் கொள்முதல் மற்றும் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
ஆலை உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது. கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை, மாநில அரசு கண்காணிக்கவில்லை. பிரச்னை தீவிரம் அடைந்ததால், முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை பின்பற்றி, மாம்பழக்கூழ் ஆலைகளில் உற்பத்தியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன்பின், கர்நாடகா மாநிலத்திற்கு குவிண்டாலுக்கு, 1,616 ரூபாய் மத்திய அரசு வழங்குவதுபோல, தமிழகம் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை பரிசீலிக்கப்படும் என, தமிழக அரசு குழுவினரிடம் தெளிவாக தெரிவிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.