போக்குவரத்து கழக பிரச்னைகளுக்கு தீர்வு: முதல்வருக்கு 9 தொழிற்சங்கங்கள் கடிதம்
போக்குவரத்து கழக பிரச்னைகளுக்கு தீர்வு: முதல்வருக்கு 9 தொழிற்சங்கங்கள் கடிதம்
ADDED : நவ 13, 2024 05:18 AM

சென்னை : போக்குவரத்து கழக ஊழியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, முதல்வருக்கு தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கங்கள் கடிதம் அனுப்பி உள்ளன.
அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும், அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம், சென்னை பல்லவன் சாலையில் நேற்று நடந்தது. இதில், தொ.மு.ச., ---- சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 50 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக இயங்கி வரும், போக்குவரத்து கழகங்கள், விழா காலங்களில் தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். காலியாக உள்ள 25,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடித்து, நிலுவை தொகையை வழங்க வேண்டும். கடந்த, 19 மாத காலத்துக்கான, ஓய்வு கால பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.
அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும், வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்க வேண்டும். போக்குவரத்து கழக வரன்முறை தொடர்பாக, அ.தி.மு.க., ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்கள் ஒன்பது தொழிற்சங்கங்கள் சார்பில், முதல்வருக்கு கடிதமாக அனுப்பப்பட்டுள்ளன.