விரைவில் 100 மின்சார ஆம்னி பஸ்கள் 3 இடங்களில் 'சார்ஜிங்' மையங்கள் பஸ் உரிமையாளர்கள் முடிவு
விரைவில் 100 மின்சார ஆம்னி பஸ்கள் 3 இடங்களில் 'சார்ஜிங்' மையங்கள் பஸ் உரிமையாளர்கள் முடிவு
ADDED : அக் 25, 2025 12:48 AM
சென்னை,:தமிழகத்தில் முதன்முறையாக, 100 மின்சார ஆம்னி பஸ்கள் ஒரு மாதத்தில் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளாம்பாக்கம் உட்பட மூன்று இடங்களில், 'சார்ஜிங்' மையங்கள் அமைக்க, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, சேலம், தஞ்சாவூர், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இயக்க, 100 மின்சார ஆம்னி பஸ்களை, 178 கோடி ரூபாயில் வாங்க, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம், டாடா மோட்டார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:
தமிழகத்தில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 'இன்டர்சிட்டி' ஆம்னி மின்சார சொகுசு பஸ்களை இயக்க உள்ளோம். ஒரு முறை சார்ஜிங் செய்தால், 380 கி.மீ., துாரம் செல்ல முடியும். முதல்கட்டமாக, 100 பஸ்களை இன்னும் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம்.
உளுந்துார்பேட்டையில், சார்ஜிங் மையம் பணிகள் முடிந்து தயாராக உள்ளது. அதுபோல், கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம், வேலுார் பஸ் நிலையங்கள் அருகில், சார்ஜிங் மையங்கள் அமைக்க, இடங்களை தேர்வு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

