தொண்டை வலி, காதோர வலியா? பொன்னுக்கு வீங்கியாக இருக்கலாம்!
தொண்டை வலி, காதோர வலியா? பொன்னுக்கு வீங்கியாக இருக்கலாம்!
ADDED : பிப் 07, 2025 12:50 AM
சென்னை:தொண்டை வலி, காது ஓரங்களில் வலியால் பாதிக்கப்படுவர்கள் அதிகரித்து வரும் நிலையில், அது பொன்னுக்கு வீங்கியாக இருக்கலாம் என, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெயில் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, 'மம்ப்ஸ்' என்ற பொன்னுக்கு வீங்கி பாதிப்பு, மழை மற்றும் குளிர் காலங்களிலும், பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நோய், காற்றில் வேகமாக பரவக்கூடியது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு, காது ஓரங்களில் வீக்கம் ஏற்படும்.
ஆனால், காய்ச்சலுடன், தொண்டை வலி மற்றும் காது ஓரங்களில் வீக்கம் இல்லாமல், வலியால் பாதிக்கப்பட்டு, பெரும்பாலானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு காய்ச்சல் தடுப்பு, வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிட்டபோதிலும், பாதிப்பு நீடிப்பதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், என்ன வகை பாதிப்பு என தெரியாமல், பலர் அச்சமடைந்துஉள்ளனர்.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொன்னுக்கு வீங்கி என்றால், காதுகளுக்கு கீழே வலி, காய்ச்சல், உடல் சோர்வு ஏற்படும்.
அதேநேரம், ஒருசிலருக்கு உமிழ்நீர் சுரப்பி வீக்கம் ஏற்படாமல், பொன்னுக்கு வீங்கி பாதிப்பு ஏற்படுத்தலாம்; அச்சப்பட வேண்டியதில்லை. முறையாக டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்.
இந்நோய் தானாகவே குணமாகலாம். நோய் பாதிப்பு காலத்தில், அதிக நீர்ச்சத்துள்ள உணவு களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு வீக்கம் இருந்தால், அதற்கான மருந்துகள் வழங்கப்படும்.
அதேநேரம், குழந்தைகள், இணை நோயாளிகள், முதியவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அலட்சியம் காட்டாமல் சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

