தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களை தாம்பரத்திற்கு மாற்ற எதிர்ப்பு
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களை தாம்பரத்திற்கு மாற்ற எதிர்ப்பு
ADDED : ஜூலை 24, 2011 02:56 AM
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள், தாம்பரத்தில் இருந்து இயக்குவதற்கான நடவடிக்கையில் ரயில்வே துறை இறங்கியுள்ளது.
'தாம்பரத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டால், பயண நேரம் 2 மணி நேரம் கூடுதலாகும். எனவே, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்தே தென்மாவட்ட ரயில்களை தொடர்ந்து இயக்க வேண்டும்' என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்ல பாண்டியன், முத்து நகர், நெல்லை உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத் தவிர, வட மாநிலங்களுக்குச் செல்லும் சில ரயில்களும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
ரயில்களில் பயணிக்க, தினசரி லட்சக்கணக்கான பயணிகள் எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிகின்றனர். வழக்கமான ரயில்களுடன், அவ்வப்போது சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால், எழும்பூர் ரயில் நிலையத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இயக்கப்படும், வடமாநிலங்களுக்கான ரயில்களை நிறுத்த இடமில்லாமல், நெருக்கடி ஏற்படுகிறது. தென் மாவட்ட ரயில்களைத் தாம்பரத்திற்கு மாற்றிவிட்டு, சென்ட்ரலில் இருந்து இயங்கும் ரயில்கள் சிலவற்றை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில், பயணிகள் மற்றும் ரயில்களின் நெருக்கடியை குறைக்கும் வகையில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள், தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்தது. இதற்காக, தாம்பரம் ரயில் நிலையம், 40 கோடி ரூபாய் செலவில் மூன்றாவது 'டெர்மினலாக' மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது நடக்கின்றன.
ரயில்வே துறையின் இந்த நடவடிக்கைக்கு தென் மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க செயலர் எட்வர்ட் ஜெனி கூறியதாவது: தென் மாவட்ட ரயில்களை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தென் மாவட்ட ரயில்களை தாம்பரம் வரை இயக்கினால், சென்னை நகருக்கு வர பொதுமக்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். தாம்பரத்தில் இருந்து சென்னை நகருக்குள் செல்ல, ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. குடும்பத்துடன் சென்னைக்கு வருபவர்கள், அலைய நேரிடும். எனவே, வழக்கமாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களை எழும்பூரில் இருந்து இயக்க வேண்டும். சிறப்பு ரயில்கள், புதிதாக இயக்கப்படும் ரயில்களை மட்டும் தாம்பரத்தில் இருந்து இயக்க வேண்டும். இவ்வாறு எட்வர்ட் ஜெனி கூறினார்.
இது குறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'தற்போது சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் கடும் நெரிசல் உள்ளது. இவற்றை விரிவுபடுத்தவும் முடியாத நிலை. எனவே, இட நெரிசலைக் குறைக்க, தென் மாவட்ட ரயில்களை தாம்பரம் அல்லது செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் மாற்றினால் தான் சரியாக இருக்கும். எனவே, தாம்பரம் ரயில் நிலையம் மூன்றாவது டெர்மினலாக மாற்றப்பட்டு வருகிறது,' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -