துபாய் பந்தயம் முடிந்தது...! போர்ச்சுகல் பறந்த நடிகர் அஜித்குமார்
துபாய் பந்தயம் முடிந்தது...! போர்ச்சுகல் பறந்த நடிகர் அஜித்குமார்
ADDED : ஜன 17, 2025 04:08 PM

சென்னை: துபாய் கார் ரேஸ் முடிந்துள்ள நிலையில், போர்ச்சுகல்லில் உள்ள மற்றொரு பந்தயத்தில் கலந்து கொள்கிறார் நடிகர் அஜித்குமார்.
கார் பந்தயத்தில் அதிக ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர் நடிகர் அஜித் குமார். திரைத்துறை வாழ்க்கைக்கு இடையே துபாயில் அண்மையில் முடிந்த 24 எச் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்து கொண்டார். இதற்காக அவர் அஜித்குமார் ரேசிங் என்ற அணியையும் தொடங்கினார்.
இந்த போட்டியில் அவரது அணி 3ம் இடத்தை பிடிக்க, வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்தன. 24 எச் சீரிஸ் போட்டிக்கு பின் பேட்டி ஒன்றில் பேசிய அஜித்குமார், தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் முதல் முறையாக கார் ரேஸ் இரவு நேரத்தில் நடந்தது. இந்த முன்னெடுப்பு மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல உதவும் என்று கூறி இருந்தார்.
இந் நிலையில் துபாயைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் போர்ச்சுகல் சென்றுள்ளார். அங்கு நடக்க உள்ள தெற்கு ஐரோப்பிய தொடர் 2025 கார் பந்தயத்தில் கலந்து கொள்கிறார். இந்த போட்டி நாளை (ஜன.18) மற்றும் நாளை மறுநாள் (ஜன.19) ஆகிய தேதிகளில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.