17 நாட்களில் 85 சரக்கு ரயில்கள் இயக்கி தெற்கு ரயில்வே சாதனை
17 நாட்களில் 85 சரக்கு ரயில்கள் இயக்கி தெற்கு ரயில்வே சாதனை
ADDED : அக் 17, 2025 11:05 PM
சென்னை: தெற்கு ரயில்வே, 17 நாட்களில், 85 சரக்கு ரயில்கள் இயக்கி, புதிய சாதனை படைத்து உள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
தெற்கு ரயில்வேயில் சரக்குகள் கையாள்வதை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து சரக்குகளை கையாளும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
2.3 லட்சம் டன் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் கோரிக்கையை ஏற்று, தெற்கு ரயில்வே, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு, நேரடி கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை எடுத்து வர, சரக்கு ரயில்களை இயக்கியது.
தஞ்சை, நாகப்பட்டினம், நீடாமங்கலம், கும்பகோணம், சீர்காழி, மயிலாடுதுறை, பேரளம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பட்டுக்கோட்டை, விருத்தாசலம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள, 'கூட்ஸ் ஷெட்' களில் இருந்து, சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுதும், அக்., 1 முதல் 17ம் தேதி வரை, 85 ரயில்கள் இயக்கப்பட்டு, 2.3 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
சிறந்த சேவை இதே காலகட்டத்தில், கடந்த ஆண்டில் 21 சரக்கு ரயில்கள், 2023ல் 16 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை, ரயிலில் எடுத்து வந்து, தெற்கு ரயில்வே சிறந்த சேவை வழங்கி வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.