கோடை விடுமுறை சிறப்பு ரயில்கள் இயக்குவதில் தெற்கு ரயில்வே சுணக்கம்; ஓட்டுநர் பற்றாக்குறை காரணமா
கோடை விடுமுறை சிறப்பு ரயில்கள் இயக்குவதில் தெற்கு ரயில்வே சுணக்கம்; ஓட்டுநர் பற்றாக்குறை காரணமா
ADDED : பிப் 18, 2025 02:24 AM

மதுரை: தெற்கு ரயில்வேயில் ரயில் ஓட்டுநர், கார்டு உள்ளிட்டோர் பற்றாக்குறையால் கோடை விடுமுறையில் சிறப்பு ரயில்களை இயக்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
சனி தோறும் இயக்கப்படும் ஹூப்ளி - ராமேஸ்வரம் (07355) மார்ச் 22 முதல் ஏப்., 26 வரை, ஞாயிறு தோறும் இயக்கப்படும் ராமேஸ்வரம் - ஹூப்ளி (07356) மார்ச் 23 முதல் ஏப்., 27 வரை, நாகர்கோவில் - தாம்பரம் (06012) ஏப். 13 முதல் ஜூன் 29 வரை, திங்கள் தோறும் இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் (06011) ஏப். 14 முதல் ஜூன் 30 வரை 'இயக்க'காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
மக்களிடம் வரவேற்பு பெற்ற மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் (06029/06030), எழும்பூர் - திருநெல்வேலி - எழும்பூர் (06069/06070) ஆகிய வாராந்திர ரயில்களும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. தைப்பூசத்திற்கு பழநிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும் திருச்செந்துாருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை.
சென்னை - நாகர்கோவில் இடையே இரட்டை ரயில்பாதை மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில் காத்திருப்போர் பட்டியலை தவிர்க்க கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என பயணிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் ஏற்கனவே இயங்கிய சிறப்பு ரயில்கள் நிறுத்தப்பட்டது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டுநர், கார்டு உள்ளிட்டோர் பற்றாக்குறையே இதற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.
தெற்கு ரயில்வேயில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பாமல் ரயில்வே வாரியம் தாமதிப்பதால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு ஊழியர்கள் மீது பணிச்சுமை அதிகரிக்கிறது. மன அழுத்தத்துடன் பணிபுரிவதால் விடுப்பில் செல்லும் நிலையுள்ளது. இதன் காரணமாக சிறப்பு ரயில்களை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் வரவுள்ள மாசி பெருந்திருவிழா, கோடை விடுமுறையின் போது சிறப்பு ரயில்களை இயக்குவதில் சுணக்கம் ஏற்படும்.
தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா கூறுகையில், ''மதுரைக் கோட்டத்தில் 50 ஓட்டுநர்களின்பற்றாக்குறை உள்ளது.
இதனால் தென்மாவட்டங்களை மையமாக வைத்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே போதுமான ரயில்ஓட்டுநர்களை பணியமர்த்தி கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.

