'அரை மணி நேரமாவது பேசுங்க பிரதர்!': விஜய்க்கு செங்கோட்டையன் அறிவுரை
'அரை மணி நேரமாவது பேசுங்க பிரதர்!': விஜய்க்கு செங்கோட்டையன் அறிவுரை
UPDATED : டிச 17, 2025 10:32 AM
ADDED : டிச 17, 2025 12:55 AM

சென்னை: 'ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உரையாற்ற வேண்டும்' என்று, த.வெ.க., தலைவர் விஜய்க்கு, அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் அறிவுரை கூறியுள்ளனர்.
கடந்த 2024 பிப்ரவரியில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய விஜய், அதே ஆண்டு அக்டோபரில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, முதல் மாநாட்டை நடத்தினார். அம்மாநாட்டில், அவரது பேச்சு, 46 நிமிடங்கள் நீடித்தது. அதன் பின், கடந்த ஆகஸ்டில், மதுரையில் நடந்த த.வெ.க., மாநாட்டில், 35 நிமிடங்கள் விஜய் பேசினார்.
அதைத் தொடர்ந்து, செப்டம்பரில், பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், நாகை, திருவாரூர் என அடுத்தடுத்து பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார வாகனத்தில் இருந்தபடியே உரையாற்றிய அவர், 10 நிமிடங்களுக்கு மேல் பேசவில்லை. செப்டம்பர் 27ல், கரூரில் அவர் பேசியபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, சிறிது இடைவெளிக்கு பின், கடந்த நவம்பர் 23ல் மீண்டும் தனது பயணத்தை துவங்கிய விஜய், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில், உள்அரங்கம் ஒன்றில் நடந்த 'மக்கள் சந்திப்பு' கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
பின்னர், கடந்த 9 ஆம் தேதி புதுச்சேரியில் முதன் முறையாக நடந்த த.வெ.க., பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது 12 நிமிடங்களே அவர் உரையாற்றினார். இந்த நிலையில், நாளை ஈரோடு மாவட்டத்தில், அடுத்த 'மக்கள் சந்திப்பை' நிகழ்த்த உள்ளார், விஜய்.
கரூர் சம்பவத்துக்கு பின், தமிழகத்தில் விஜய் பொதுவெளியில் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே, சரளை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நாளை நடைபெறுகிறது.
கூட்ட ஏற்பாடுகளை, சமீபத்தில் த.வெ.க.,வில் அவர் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருகிறார். த.வெ.க.,வில் இணைந்த பின் நடத்தும் முதல் நிகழ்ச்சி என்பதாலும், கொங்கு மண்டலத்தில் தன் செல்வாக்கை பறைசாற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாலும், பிரமாண்ட ஏற்பாடுகளை செய்கிறார்.
இந்த நிலையில் தான், 'ஈரோடு நிகழ்ச்சியில், அரை மணி நேரமாவது உரையாற்ற வேண்டும்' என்று த.வெ.க., தலைவர் விஜயிடம், செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார்.
விஜயின் உரையை கேட்டு ரசிக்க ஆர்வத்துடன் வரும் தொண்டர்களை ஏமாற்றக்கூடாது என்று, த.வெ.க.,வின் பிற மாநில நிர்வாகிகளும் விஜயிடம் கூறியுள்ளனர்.
இது குறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு, த.வெ.க., தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமின்றி, ஏராளமான பொதுமக்களும், பல மணி நேரத்திற்கு முன்பே வந்து காத்திருக்கின்றனர். ஆனால் விஜய், 10 நிமிடங்களில் தனது பேச்சை முடித்து விடுகிறார்.
இதனால், அவரது பேச்சைக்கேட்க நெடுநேரம் காத்திருப்பவர்கள், ஏமாந்து போகின்றனர். எனவே ஈரோட்டில், குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது பேச வேண்டும் என விஜய்க்கு, கட்சியினர் ஆலோசனை கூறியுள்ளனர். இவ்வாறு அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

