ADDED : ஆக 30, 2024 06:17 AM

சென்னை: ''தமிழகத்தில் தற்போது இருக்கின்ற கல்வி முறையே போதும். புதிய கல்வி முறை தேவை இல்லை,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, 'சட்டசபை நாயகர் - கலைஞர்' என்ற தலைப்பில், மாநில அளவிலான கருத்தரங்கம், நேற்று சென்னை, மயிலாப்பூர் ரோசரி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதில், சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:
தமிழகம் கல்வியில், இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. மத்திய அரசு, 8ம் வகுப்பு வரை, கட்டாயக் கல்வி என்கிறது. பள்ளி கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. தமிழக அரசு கல்விக்கு, அதிக நிதியை ஒதுக்குகிறது. நடப்பாண்டு பட்ஜெட்டில், 44,000 கோடி ரூபாய் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மொத்த பட்ஜெட்டில், 8 சதவீதம். இது போக உயர் கல்வி உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டால்தான், 'சமக்ரா சிக் ஷா அபியான்' திட்டத்தில் நிதி ஒதுக்குவேன் எனக் கூறுகிறது. இது நியாயமா. எந்த அரசு எந்த கல்விக் கொள்கையை கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பது நோக்கமல்ல.
மோடி கொண்டு வந்ததால் ஏற்க மாட்டோம் என சொல்லவில்லை. ஆனால், 5ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால், உன் தந்தையார் தொழிலுக்கே செல்ல வேண்டும் என, மறைந்த ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை, மீண்டும் கொண்டு வருவதை ஸ்டாலின் எதிர்க்கிறார்.
நாட்டில், 10 கோடிக்கு மேல் தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். சமஸ்கிருதம் பேசுவோர், 25,000 பேர் இருப்பர். அந்த மொழியை கட்டாயம் படிக்க வேண்டுமென்பது நியாயமா.
எனவே, முதல்வர் சமஸ்கிருதம் தேவை இல்லை என்கிறார். தமிழகத்தில் தற்போது இருக்கின்ற முறையே போதும். புதிய கல்வி முறை தேவை இல்லை.
இவ்வாறு, அவர் பேசினார்.