ADDED : ஆக 26, 2026 03:23 AM
சென்னை: 'தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், வரும் 29ல், கைரேகைப் பதிவு சிறப்பு முகாம் நடக்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா, அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் உள்ள பயனாளிகளின், ஆதார் விபரங்களை சரிபார்க்கும் வகையில், விரல் ரேகை அடிப்படையிலான, இ.கே.ஒய்.சி., பதிவை மேற்கொள்ள, மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
தமிழகத்தில், கடந்த 2023 அக்டோபர் முதல் இப்பணிகள் நடந்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில், 96.21 சதவீதம் இ.கே.ஒய்.சி., பதிவுகள் நிறைவடைந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், வரும் 29ல், காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, இ.கே.ஒய்.சி., பதிவு முகாம் நடைபெறும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
