ADDED : அக் 27, 2024 02:37 AM
சிறப்பு ரசாயனங்கள் (ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்) உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சீனா முன்னணியில் உள்ளது. உலகின் 15 முதல் 17 சதவீத சந்தை இதன் கைவசம் உள்ளது. நம் நாட்டின் பங்கு இரண்டு சதவீதம் வரைதான். நமக்கு ஏற்றுமதிக்கான பரவலான வாய்ப்புகள் உள்ளதை இது வெளிப்படுத்துகிறது.
குறைந்த விலையில் சீனா பொருட்களைக் குவிப்பது உலகளாவிய சந்தைகளைக் கணிசமாக பாதிக்கிறது; உள்ளூர் சந்தைகளில் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிற்குள் வரும் சீனப்பொருட்கள் பலவற்றுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக், மருந்து, பூச்சிக்கொல்லி தயாரிப்பதில் பரவலாகப் பயன்படுத்தப்படும் 'பீனால்' உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க நிபுணத்துவம் பெற்றுள்ளது. சீன இறக்குமதிகளுடன் போட்டியிட, புதுமை உற்பத்தி முறைகள் மற்றும் உள்நாட்டு மூலப்பொருள் கிடைப்பதன் மூலம் இந்திய நிறுவனங்கள் தரம் மற்றும் குறைந்த விலையை மேம்படுத்தலாம்.
வலுவான அடித்தளம்
இந்தியா, மருந்து தயாரிப்பில் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது; புதுமையான மருந்து கட்டமைப்புகளை உருவாக்க மதிப்புச் சங்கிலியை இப்போது உயர்த்தி வருகிறது. இதில் இந்தியா சீனாவுடன் போட்டியிட முடியும்.
நம் நாட்டை முக்கிய ரசாயன உற்பத்தி மையமாக மாற்றுவதை, பெங்களூரை சேர்ந்த ஆட்டம்கிரிட் (Atomgrid) என்ற ஸ்டார்ட் அப் நோக்கமாக கொண்டுள்ளது.
குறிப்பிடத்தக்க சவால்கள்
உற்பத்தி, ஏற்றுமதித்திறன் மேம்பாடு மூலம், இந்திய உற்பத்தியாளர்களை உலகளவில் கொண்டு செல்ல இதன் முயற்சி பெரிது; உற்பத்தியாளர்கள் 250க்கும் மேற்பட்டோருடன் இணைந்து, குறிப்பிடத்தக்க சவால்களை இந்நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. சிறப்பு ரசாயனத்துறை, தொழில்துறை வளர்ச்சியை உயர்த்துகிறது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் திறன்களை அதிகப்படுத்துவதன் மூலம் 'ஆட்டம்கிரிட்' தனித்து நிற்கிறது. கிராக்கி - வினியோகம் இடையே இருக்கும் இடைவெளியை நிரப்புவதுடன், சங்கிலித்தொடரிலும் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் உற்பத்தி, வியாபாரம், ஏற்றுமதியை மேம்படுத்தலாம். சிறப்பு ரசாயனம் உற்பத்தியில் இருப்பவர்கள் இவர்களுடன் தொடர்பு கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்தலாம்.
இணையதளம்www.atomgrid.in
இ-மெயில்sales@atomgrid.in.
விவரங்களுக்கு இ மெயில்: sethuraman.sathappan@gmail.com
அலைபேசி: 98204 - 51259
இணையதளம் www.startupandbusinessnews.com
-சேதுராமன் சாத்தப்பன்-