ADDED : நவ 09, 2024 10:29 PM
சென்னை:சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளில், மாணவர்கள் சேராத, 308 இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கவுன்சிலிங், 15ம் தேதி நடைபெற உள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 2,310 இடங்கள் உள்ளன.
இதில், பி.எஸ்.எம்.எஸ்., என்ற சித்தா, பி.ஏ.எம்.எஸ்., என்ற ஆயுர்வேதா, பி.எ.எம்.எஸ்., என்ற யுனானி, பி.எச்.எம்.எஸ்., என்ற ஓமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
'நீட்' தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். கடந்த மாதம் கவுன்சிலிங் முடிக்கப்பட்டது. கல்லுாரிகளில் இடங்கள் பெற்றவர்கள், குறிப்பிட்ட காலத்தில் கல்லுாரிகளில் சேர அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால், 308 மாணவர்கள் இடங்கள் பெற்றும் கல்லுாரிகளில் சேரவில்லை. அவை காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு, வரும் 15ல், சென்னை அரும்பாக்கம், சித்தா மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு கவுன்சிலிங் நடக்க உள்ளது.
மேலும் விபரங்களை, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.