ADDED : நவ 06, 2025 10:15 PM
சென்னை:கூடுதல் விலையில், உரங்கள் விற்கப்படுவதை தடுக்க, வேளாண் துறையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ அறுவடை முடிந்து, சம்பா பருவ நெல் சாகுபடி துவங்கி உள்ளது. இப்பருவத்தில், 12 லட்சம் ஏக்கர் வரை, சாகுபடி நடக்கும் வாய்ப்புள்ளது.
இதேபோல், மற்ற மாவட்டங்களில், நெல் மட்டுமின்றி, பருப்பு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியில், விவசாயிகள் கவனம் செலுத்துகின்றனர்.
வடகிழக்கு பருவமழை முதல் சுற்று பெய்து முடிந்த நிலையில், பல மாவட்டங்களில், உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.
குறிப்பாக யூரியா தேவை இருமடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், மத்திய அரசு போதுமான அளவில், தமிழகத்திற்கு யூரியா வழங்கவில்லை. இதனால், பல இடங்களில் யூரியாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தனியார் கடைகள் மட்டுமின்றி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், உரங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.
யூரியா வேண்டும் என்றால், 800 ரூபாய்க்கு பூச்சிக்கொல்லி உள்ளிட்ட இணை பொருட்களை வாங்க வேண்டும் என நிர்பந்தம் செய்யப்படுகிறது. இதனால், சாகுபடி செலவு அதிகரிக்கிறது.
இந்த விவகாரம், வேளாண்துறை செயலர் தட்சிணாமூர்த்தி, இயக்குநர் முருகேஷ் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இதையடுத்து, கூடுதல் விலையில் உரங்கள் விற்பனை செய்வதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, வேளாண்துறையில் 10 பேர் கொண்ட, தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இப்படையினர் ரகசியமாக பல்வேறு மாவட்ட உரக்கடைகளுக்கு சென்று ஆய்வு செய்து, விதிமீறலில் ஈடுபட்டோர் மீது, நடவடிக்கை எடுக்க உளளனர்.

