ADDED : ஜன 30, 2026 06:52 AM
சென்னை: ''ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசு தரப்பில் இரண்டு வார அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது. அதனால், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது,'' என, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர் சங்க பொதுச்செயலர் காணி ராஜா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
ஊதிய உயர்வுடன் கூடிய நிரந்தர பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 21ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
அதன்படி, எட்டாம் நாளாக நேற்று, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி அழைத்து பேச்சு நடத்தினார்.
தொழிலாளர்கள் வைப்பு நிதி, ஊதிய உயர்வு, தொகுப்பூதிய பணி ஆணை, ஊர்திப்படி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதிஅளிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இவற்றை நிறைவேற்ற, அரசு தரப்பில் இரண்டு வார அவகாசம் கோரப்பட்டு உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

