சைபர் குற்றவாளிகளுடன் தொடர்பு சிறப்பு காவல் படை காவலர் கைது
சைபர் குற்றவாளிகளுடன் தொடர்பு சிறப்பு காவல் படை காவலர் கைது
ADDED : மார் 12, 2026 01:42 AM

சென்னை: சர்வதேச சைபர் குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்து, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த, தமிழக சிறப்பு காவல் படை காவலரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தங்கி, 'ஆன்லைன்' வாயிலாக, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த, சர்வதேச சைபர் குற்றவாளிகளின் கூட்டாளிகள் ஏழு பேர், நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், மோசடி செய்த பணத்தை, கிரிப்டோ கரன்சிகளாக மாற்றி, வெளி நாடுகளில் உள்ள, சைபர் குற்ற மோசடி கும்பல் தலைவனுக்கு அனுப்பி இருப்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், கைதான ஏழு பேரில், தமிழக சிறப்பு காவல் படையை சேர்ந்த காவலர் பிரதீப்பும் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த பிரதீப், திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு பகுதியில் உள்ள, 12 வது பட்டாலியனில் பணிபுரிந்து வந்துள்ளார். ஏழு பேரையும், மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக போலீசார், நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க, முடிவு செய்துள்ளனர்.

