சிறப்பு எஸ்.ஐ., கொலை வழக்கு; கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சிறப்பு எஸ்.ஐ., கொலை வழக்கு; கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
UPDATED : ஆக 07, 2025 04:47 PM
ADDED : ஆக 07, 2025 07:59 AM

திருப்பூர்: சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை சிக்கனுாத்து கிராமத்தில், மடத்துக் குளம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, 60, அவரது மகன் தங்கபாண்டியன், 25, ஆகியோர் வேலை பார்த்தனர். இவர்களை பார்க்க, மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன், 30, சிக்கனுாத்து வந்தார்.
மது அருந்திய பின், தந்தை, மகன்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. மூவரும் அரிவாளை கையில் வைத்துக் கொண்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஒருவரை ஒருவர் தாக்க முயற்சித்தனர். அங்கு சென்ற பண்ணை மேலாளர் ரங்கசாமி, குடிமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
வாக்குவாதம்
சம்பவ இடத்துக்கு குடிமங்கலம் எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல், 57, போலீஸ் காரர் அழகுராஜா ஆகியோர், நெடுஞ்சாலை ரோந்து ஜீப்பில் சென்றார். அப்போது, மணிகண்டன், அங்கிருந்தவர்களை தாக்க முயற்சித்துள்ளார். அவருடன் மூர்த்தி, தங்கபாண்டியன் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல், போலீஸ்காரர் அழகுராஜா மற்றும் பண்ணை மேலாளர் ரங்கசாமி அங்கிருந்து தப்பியோடினர்.
சிறப்பு எஸ்.ஐ உயிரிழப்பு
தென்னந்தோப்புக்குள் இருட்டாக இருந்ததால், எஸ்.எஸ்.ஐ., சண்முகவேலால் நீண்ட துாரம் ஓட முடியவில்லை. அவரை விரட்டிச் சென்ற மணிகண்டன், அரிவாளால் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே சண்முகவேல் இறந்தார். பின்னர் மூர்த்தி, தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகிய மூவரும் அங்கிருந்து தப்பியோடினர். பின்னர் மூர்த்தி, தங்கபாண்டியன் போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தனர்.
என்கவுன்டர்
தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த சூழலில் இன்று காலை சிக்கனுாத்து கிராமத்தில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார். பின்னர் மணிகண்டன் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறப்பு எஸ்.ஐ., கொலை வழக்கில், கொலையாளி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட மணிகண்டன் உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டன் தாக்கிய போது காயமடைந்த குடிமங்கலம் எஸ்.ஐ.,சரவணகுமார் உடுமலை அரசு மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சைகாக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

