கற்றல் குறைபாடுள்ள மாணவருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க உத்தரவு
கற்றல் குறைபாடுள்ள மாணவருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க உத்தரவு
UPDATED : அக் 14, 2026 08:56 PM
ADDED : அக் 14, 2026 08:54 PM
சென்னை: தமிழக சட்டசபையில், பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது, தமிழக அரசு பள்ளிகளில், இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின், மொழிப்பாட திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், ‘திறன் பிளஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இதன்படி, தமிழ், ஆங்கில எழுத்துகள் மற்றும் சொற்களைக் கண்டறிதல்; இரண்டெழுத்து மற்றும் மூன்றெழுத்து சொற்களை வாசித்தல் மற்றும் எழுதுதல்; ஒரு தொடரை வாசித்தல்; எண்களை எழுதுதல்; வாய்ப்பாடுகள்; இரண்டு இலக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய அடிப்படை கணித செயல்பாடுகள் ஆகியவற்றில், இடர்பாடு கொண்ட மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்நிலையில், மொழிப்பாடத்திறன் மற்றும் கணிதத் திறனில், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களைக் கண்டறிந்து, ‘திறன் பிளஸ்’ இயக்கத்தின் வழியே, சிறப்பு பயிற்சிகள் அளிப்பதற்காக, மதிப்பீடு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான தேர்வு, வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. தேர்வு முடிவுகள் வழியே, கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, திறன் பிளஸ் திட்டத்தின் வழியே, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
