ADDED : அக் 23, 2024 06:19 AM

சென்னை : தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து 10 லட்சம் பேர், சொந்த ஊர் செல்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, 11,000க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகை, வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோர், சொந்த ஊருக்கு சென்று, தீபாவளியை கொண்டாடுவர். அவர்கள் செல்ல வசதியாக, சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,092 பஸ்களுடன், 4,900 சிறப்பு பஸ்கள் என, மூன்று நாட்களுக்கு சேர்த்து, மொத்தமாக 11,176 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பயணியர் தேவைக்கு ஏற்ப, தனியார் பஸ்களையும் ஒப்பந்த அடிப்படையில் இயக்க உள்ளதாக, அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே சார்பில், மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, செங்கோட்டை, கோவை உள்ளிட்ட வழித்தடங்களில், 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகம் முழுதும் வழக்கமாக இயக்கப்படும் 2,500 பஸ்களோடு கூடுதலாக 1,000 ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என, அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, கார்கள் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலும், அதிக அளவில் மக்கள் செல்வர். எனவே, தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
தீபாவளிக்கு ஏற்கனவே அறிவித்தபடி, சிறப்பு பஸ்கள் இயக்க தயாராக உள்ளோம். நெரிசலை தவிர்க்க, கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் நிலையங்களில் இருந்து, பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அரசு விரைவு பஸ்களில் பயணிக்க, 1.08 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
கடந்த தீபாவளிக்கு, சென்னையில் இருந்து அரசு பஸ்களில் ஐந்து லட்சம் பேர் பயணம் செய்தனர். இந்த தீபாவளிக்கு 5.82 லட்சம் பேர் பயணம் செய்வர் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும், விரைவு ரயில்களோடு, 40க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை - திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி; தாம்பரம் - நாகர்கோவில்; சென்னை - கோவை வழித்தடங்களில், 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மூன்று லட்சம் பேர் வரை பயணிப்பர் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.
ஆம்னி பஸ்களிலும், சொந்த வாகனங்களிலும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடும் என தெரிகிறது. பெரும்பாலானோர் வரும் 28, 29ம் தேதிகளில் பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. 'பயணியர் ஒரே நேரத்தில் செல்வதை தவிர்த்து, காலை முதலே செல்ல திட்டமிட்டு சென்றால், போக்குவரத்து நெரிசலில், பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்க முடியும்' என, போலீசார் தெரிவித்துள்ளனர்.