இம்மாத இறுதியில் சிறப்பு வார்டு கூட்டம்; நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடத்த உத்தரவு
இம்மாத இறுதியில் சிறப்பு வார்டு கூட்டம்; நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடத்த உத்தரவு
ADDED : அக் 22, 2025 01:44 AM

கோவை: தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில், அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில், பொதுமக்கள் பங்கேற்புடன், 27, 28, 29 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு நாள் சிறப்பு வார்டு கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருப்பதால், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சிகளின் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதில் குடிநீர் வழங்கல், குப்பை மற்றும் கழிவுநீர் மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழைநீர் வடிகால் பராமரிப்பில் சேவை குறைபாடு தொடர்பாக விவாதிக்க வேண்டும்.
மழை நீர் வடிகால் துார் வாருவது, மழை நீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆலோசிக்க வேண்டும். பொதுமக்களிடம் பெற்ற ஆலோசனை மற்றும் கருத்துகளில் முன்னுரிமை அடிப்படையில் மூன்று கோரிக்கைகளை, அந்தந்த மாநகராட்சி கமிஷனர்கள் நேரடியாக தேர்வு செய்து, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இதேபோல், நகராட்சிகள் வாரியாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களும், பேரூராட்சிகள் வாரியாக பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர்களும் தொகுத்து, அந்தந்த இயக்குநரகங்களுக்கு அனுப்ப வேண்டும்.
அதன் விபரங்களை, 'முதல்வரின் முகவரி' இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அவற்றின் தீர்வுக்கான நடவடிக்கைகளை, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் மற்றும் பேரூராட்சிகளின் இயக்குநர் கண்காணிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
முறையாக நடத்தினால்
பிரச்னைகளுக்கு தீர்வு
ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்துவதுபோல், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஆண்டுக்கு நான்கு முறை வார்டுகளில் சிறப்பு வார்டு சபை கூட்டம் நடத்த, தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேசிய வாக்காளர் தினமான ஜன., 25, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்., 14, அண்ணாதுரை பிறந்த தினமான செப்., 15, சர்வதேச மனித உரிமை தினமான டிச., 10 ஆகிய நாட்களில் ஏரியா சபை நடத்த வேண்டும்.
2022ல், உள்ளாட்சிகள் தினமான நவ., 1ல் முதல் கூட்டம் நடத்தப்பட்டது. விடுபட்ட இடங்களில் நவ., 5ல் நடத்தப்பட்டது. அதன்பின், 2023ல் செப்., 15ல் மட்டும் கூடியது; கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டாததால், 2024லும், 2025ல் இதுநாள் வரையிலும் நடத்தவில்லை. இக்கூட்டத்தை முறையாக நடத்தினால், மக்களின் பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
கவுன்சிலர்கள் அச்சம்
சிறப்பு வார்டு சபை கூட்டங்களை பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்தி, மக்கள் குறைகளை கேட்கும்போது, 'கடந்த நான்கரை ஆண்டு காலமாக, மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்னைகளை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை' என்று, கவுன்சிலர்களை நோக்கி பொதுமக்கள் கேள்வி எழுப்பக்கூடும்.
அதேபோல, கவுன்சிலர்களின் செயல்பாடுகளை, அவர்கள் முன்பாகவே விமர்சிக்கக்கூடிய சூழல் உருவாவதோடு, கவுன்சிலர்களால் மக்களிடம் பதில் அளிக்க முடியாத சூழல் ஏற்டும். அதனால் இந்த கூட்டத்தை தடுக்க, பல மாநகராட்சிகளிலும் வார்டு கவுன்சிலர்கள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.