கச்சத்தீவுக்கு இலங்கை அதிபர் 'திடீர்' பயணம் இந்திய உறவில் சிக்கல் ஏற்படும் என அச்சம்
கச்சத்தீவுக்கு இலங்கை அதிபர் 'திடீர்' பயணம் இந்திய உறவில் சிக்கல் ஏற்படும் என அச்சம்
ADDED : செப் 02, 2025 02:08 AM

இலங்கை அதிபர் அனுர குமார, நேற்று மாலை திடீரென கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதால், 'மீனவர்களை பாதுகாப்பதற்காக, கச்சத்தீவை மீட்க வேண்டும்' என தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், 'தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கு, கச்சத்தீவை மீட்பதே ஒரே தீர்வு. அதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தினார்.
விஜயின் இந்த பேச்சுக்கு, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத், கண்டனம் தெரிவித்ததோடு, தமிழக அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் இலங்கை அதிபர் அனுர குமார நேற்று காலை, இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அங்குள்ள மயிலிட்டி துறைமுகத்தில், வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்த அவர், யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.
பின்னர், திடீரென நேற்று மாலை 5:00 மணிக்கு யாழ்ப்பாணம் ஊர்க்காவல் துறையில் இருந்து, நான்கு ரோந்து படகுகளுடன், கச்சத் தீவுக்கு சென்றார்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, கச்சத்தீவை சுற்றிப் பார்த்து, அங்குள்ள மீனவர்களிடம் கலந்துரையாடினார். பின், அவர்களிடம், 'நம் மக்கள் நலனுக்காக, கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன்' என உறுதிபட தெரிவித்தார்.
பின், இலங்கை கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், இலங்கை கடற்படையின் ரோந்து படகில் யாழ்ப்பாணம் திரும்பினார். இலங்கை அதிபர் ஒருவர், கச்சத்தீவுக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை.
அதிபர் அனுரா குமார கச்சத்தீவு மீனவர்களுடன் பேசும்போது, 'இந்திய மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து, இனி மீன் பிடித்து சிக்கினால், இந்திய மீனவர்களை அவ்வளவு எளிதாக விட மாட்டோம். பிடிபடும் படகுகளை திருப்பிக் கொடுக்க மாட்டோம்; அது இலங்கைக்கே சொந்தமாகும்' என தெரிவித்து உள்ளார்.
இது, இந்திய - இலங்கை உறவில் புதிய சிக்கலை உருவாக்கும் என தெரிகிறது.
- நமது நிருபர் -