ADDED : ஏப் 17, 2025 01:20 AM

சென்னை:புதுக்கோட்டை மாவட்டத்தில் பதுங்கி இருந்த இலங்கை நபரை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த வாலிபர் ஒருவர், இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு வந்துள்ளார்.
அவரிடம், 'மெத்ஆம்பெட்டமைன்' உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருப்பது பற்றி, என்.சி.பி., எனப்படும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு, சென்னை மண்டல அதிகாரி அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது தலைமையிலான தனிப்படை அதிகாரிகள், துாத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்களில் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, போதைப்பொருள் கடத்தல் புள்ளி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
உடன், புதுக்கோட்டை மாவட்டம் மேலவிளாக்குடி பகுதியில் பதுங்கி இருந்த, இலங்கையைச் சேர்ந்த அலெக்ஸ் மகாலிங்கம், 32, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மெத்ஆம்பெட்டமைன் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.