தேர்தல் அரசியலில் ஈடுபட மாட்டேன்; ஸ்ரீதர் வேம்பு திட்டவட்டம்
தேர்தல் அரசியலில் ஈடுபட மாட்டேன்; ஸ்ரீதர் வேம்பு திட்டவட்டம்
UPDATED : ஜன 12, 2026 01:23 PM
ADDED : ஜன 12, 2026 01:21 PM

சென்னை: 'நான் தேர்தல் அரசியலில் ஈடுபட முடியாது, ஈடுபடவும் மாட்டேன் என்று ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:
வலிமையான தொழில்நுட்பம் மற்றும் தற்சார்பு கொண்ட நாடாக நம் பாரதத்தை மாற்றுவதே என் வாழ்வின் ஒரே நோக்கம். நமது பொருளாதார வளர்ச்சிக்கும், கிராமப்புற மற்றும் கலாசார மேம்பாட்டுக்கும் இது மிகவும் அவசியமானது. மனிதநேயத்தையும், இயற்கையையும் ஒருங்கிணைக்கும் நிலையான பாதையை உலகுக்குக் காட்டுவதே நமது நாகரிகத்தின் கடமையாகும்.
கடந்த 1000 ஆண்டுகால வரலாறு நமது நாகரிகத்தில் ஆறாத காயங்களை ஏற்படுத்தியுள்ளது. இதில், தோல்வி மனப்பான்மையும், காலனித்துவ சிந்தனையும் அடங்கும். நம் நாட்டின் உண்மையான பெருமைகளை மீட்டெடுப்பதற்கு அதிநவீன தொழில்நுட்பமே திறவுகோலாகும். அத்தகைய தொழில்நுட்பத்தை கிராமப்புற திறமைகளைக் கொண்டு உருவாக்கினால், அதனை இந்த சமூக முழுவதும் கொண்டு செல்லலாம்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் நாம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். இந்தத் துறையில் எனக்கு சில திறமைகள் உள்ளன. அதை நம் நாட்டிற்காகப் பயன்படுத்துவதே எனது வாழ்க்கையின் சிறந்த பயனாகும்.
அரசியலை ஒரு பொதுச் சேவையாகவும், பொதுமக்களின் ஜனநாயகக் கடமையாகவும் நான் பார்க்கிறேன். இருப்பினும், என் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நான் தேர்தல் அரசியலில் ஈடுபட முடியாது, ஈடுபடவும் மாட்டேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

