'ஸ்ரீசன் பார்மசியூட்டிகல்' நிறுவன உரிமம் ரத்து மருந்து நிறுவனங்களில் சோதனை தீவிரம்
'ஸ்ரீசன் பார்மசியூட்டிகல்' நிறுவன உரிமம் ரத்து மருந்து நிறுவனங்களில் சோதனை தீவிரம்
ADDED : அக் 14, 2025 12:03 AM

சென்னை : மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இறப்புக்கு காரணமான, 'ஸ்ரீசன் பார்மசியூட்டிகல்' நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமத்தை ரத்து செய்து, மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மருந்து கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழக மருந்து கட்டுப்பாடு துறைக்கு, அக்., 1 பகல் 3:30 மணியளவில், ஒரு கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில், செப்டம்பர், 4ம் தேதி முதல் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாக கருதப்படும் மருந்தான, 'கோல்ட்ரிப் சிரப்' குறித்த விபரம் இடம்பெற்று இருந்தது.
அன்றைய தினமே, 4:00 மணியளவில், துணை மருந்து கட்டுப்பாடு இயக்குநரின் உத்தரவில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், 'ஸ்ரீசன் பார்மசியூட்டிகல்' நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தமிழகம் முழுதும் சந்தேகத்திற்குரிய கோல்ட்ரிப் இருமல் மருந்து விற்பனையும் தடை செய்யப்பட்டது.
'நோட்டீஸ்' அந்நிறுவனத்தின், 'பேட்ச் - 13'ல் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் உட்பட, ஐந்து மருந்துகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதில், 'டை எத்திலீன் கிளைக்கால்' எனப்படும் உயிர்க்கொல்லி நச்சு ரசாயனம், கோல்ட்ரிப் மருந்தில் 48.6 சதவீதம் இருப்பது, 2ம் தேதி தெரியவந்தது.
தமிழகத்தில் இருந்து ஒடிசா, புதுச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிப் மருந்து வினியோகிக்கப்படுவதால், அம்மாநிலங்களுக்கும் இதுதொடர்பான தகவல்கள் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டன. அந்த மருந்து உற்பத்தியை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்நிறுவனம், 3ம் தேதி மூடப்பட்டது.
அன்றைய தினமே, ஸ்ரீசன் பார்மசியூட்டிகல் நிறுவனத்தின் மருந்து உரிமத்தை முழுதுமாக ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
இவ்வாறு தகவல் பெறப்பட்ட, 48 மணி நேரத்தில், தமிழக அரசின் மருந்து கட்டுப்பாடு துறையால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாடு துறைக்கும், மின்னஞ்சல் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டது.
நடவடிக்கை தமிழக காவல் துறையின் உதவியுடன், மத்திய பிரதேச சிறப்பு புலனாய்வு பிரிவு, 9ம் தேதி அதிகாலை, சென்னை அசோக் நகர் பகுதியில், அந்நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன், 75, என்பவரை கைது செய்தது.
அந்நிறுவனத்தில், 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில், முறையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்தாண்டுகளில், உரிய ஆய்வு செய்யாத காஞ்சிபுரம் முதுநிலை மருந்து ஆய்வாளர் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று, ஸ்ரீசன் பார்மசியூட்டிகல் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுதுமாக ரத்து செய்யப்பட்டு, அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது, விரிவான ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு, மாநிலம் முழுதும் உள்ள மருந்து நிறுவனங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.