எஸ்.எஸ்.ஐ.,யின் தகாத வார்த்தை; டி.ஐ.ஜி., வருண்குமார் காட்டம்
எஸ்.எஸ்.ஐ.,யின் தகாத வார்த்தை; டி.ஐ.ஜி., வருண்குமார் காட்டம்
ADDED : ஏப் 10, 2025 06:12 AM

திருச்சி : டி.ஐ.ஜி., வருண்குமார் மைக் வாயிலாக அரியலுார் மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்டு, ஒரு பெண் எஸ்.எஸ்.,ஐக்கு இடம் மாற்ற உத்தரவு போட்ட ஆடியோ வேகமாக பரவி வருகிறது.
அரியலுார் மாவட்டம், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ., ஆக பணிபுரிந்தவர் சுமதி. கற்பழிப்பு தொடர்பாக புகார் கொடுப்பதற்காக, ஒரு பெண் அவரை போனில் தொடர்பு கொண்டார். அப்போது, அந்த பெண்ணிடம், தகாத வார்த்தைகளில் பேசி புகாரை வாங்காமல் தவிர்த்தார்.
இந்த சம்பவம் டி.ஐ.ஜி., வருண்குமார் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து, அரியலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மைக் மூலம் தொடர்பு கொண்ட டி.ஐ.ஜி., வருண்குமார், அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.எஸ்.ஐ., சுமதிக்கு ஆதரவாக பேசினார்.
எஸ்.எஸ்.ஐ., பேசியதை தவறு என்று சொல்லாமல், அவர் தெரியாமல் பேசி விட்டார் என்று இன்ஸ்பெக்டர் கூறியதால், கோபமான டி.ஐ.ஜி., வருண்குமார், 'இதில் முதல் குற்றவாளி நீங்க தான். அவர் பேசியதை தவறு என்று சொல்லாமல் தெரியாமல் பேசி விட்டார் என்கிறீர்களே.. வெட்கமாக இல்லை உங்களுக்கு இன்ஸ்பெக்டர் என்று சொல்லிக் கொள்ள... தெரியாமல் பேசி விட்டார் என்று சொல்லலாமா?' என்றார்.
அவர் அமைதியாக இருந்ததால், 'மைக்கில் பதில் சொல்கிறீர்களா; நேரில் வந்து நிற்க வைக்கவா' என்று மீண்டும் கடுமையாக டி.ஐ.ஜி., பேசினார். அவர் அவ்வாறு பேசியதும், 'தப்பு தான் சார்... வார்ன் பண்ணி விடுகிறேன்' என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.
தொடர்ந்து பேசிய டி.ஐ.ஜி., 'உடனடியாக அந்த அம்மாவை ரேஞ்ச் ஆபீசுக்கு வரச் சொல்லி, புகார்களை வாங்க சொல்லுங்கள். எந்த டூட்டியில் இருந்தாலும் அவரை துரத்தி விடுங்கள். அதற்கான உத்தரவை அனுப்பி வைக்கிறேன். அப்புறம் கன்னியாகுமரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு அனுப்புறேன்' என்றார்.