ADDED : நவ 30, 2026 03:52 AM
சென்னை: ‘‘தி.மு.க.,வை எட்டப்பர் என விமர்சித்த ராகுலை, பிச்சை பாத்திரத்துடன் வராதீர் என, ஸ்டாலின் நாசூக்காக கூறி விட்டார்,’’ என, பா.ஜ., தேசிய துணைத் தலைவர் ராம் மாதவ் தெரிவித்தார்.
சென்னை கமலாலயத்தில் அவர் அளித்த பேட்டி:
லோக்சபாவில் தற்போது 543 எம்.பி.,க்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப மக்களின் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவின் அடிப்படையில், லோக்சபா எம்.பி.,க்கள் எண்ணிக்கை 850 ஆக உயர வாய்ப்புள்ளது. தொகுதி மறுவரையறை வாயிலாக தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என, ராகுல் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தவறானவை. மாறாக, தமிழகத்தின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.
ஜனநாயக முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும். இதற்காக அமைக்கப்படும் ஆணையம், தன் பரிந்துரைகளை பொதுமக்கள், ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பார்வைக்கு முன் வைக்கும்.
இதன் வாயிலாக, யாருடைய பிரதிநிதித்துவமும் தன்னிச்சையாக பறிக்கப்படாது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவாரை சந்திக்க சிலர் செல்கின்றனர்.
இத்தனை ஆண்டுகளாக அவரது உடல்நிலை குறித்து விசாரிக்காதவர்கள், தற்போது திடீரென அவர் மீது அதிக அக்கறை காட்டுவது வேடிக்கையாக உள்ளது.
தி.மு.க.,வை எட்டப்பர் என விமர்சித்த ராகுலை, பிச்சை பாத்திரத்துடன் வராதீர் என, ஸ்டாலின் நாசூக்காக கூறிவிட்டார்.
தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்களை ஆய்வு செய்து, ஆதரவு அளிக்க முன்வர வேண்டும். த.வெ.க.,வும் இந்த மசோதாக்களை திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும்.
த.வெ.க., காங்கிரஸ் கட்சியுடன் அமைத்துள்ள கூட்டணி தவறானது. அந்த கூட்டணி, முதல்வர் விஜய் அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பே, காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்து விட்டனர். த.வெ.க., சுயாதீனமாக செயல்பட்டு, இரண்டு மசோதாக்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
