ADDED : நவ 04, 2025 06:40 AM

சென்னை :  “தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., வேண்டும் என, அ.தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றம் செல்வோம்,” என்று அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவரது பேட்டி:
அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில், கூட்டணி கட்சி கூட்டத்தை, தி.மு.க., நடத்தியிருக்கிறது. எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதுதான்.
எஸ்.ஐ.ஆர்., அதாவது, 'சார்' என்றாலே முதல்வர் ஸ்டாலினுக்கு 'அலர்ஜி' தான். திருடனுக்கு தேள் கொட்டியது போல, 'சார்' என்ற பெயரை கேட்டாலே அச்சம். கடந்த 2002, 2004ம் ஆண்டுகளில், எஸ்.ஐ.ஆர்., நடத்தப்பட்டபோது, மத்திய பா.ஜ., கூட்டணி அரசில் அங்கம் வகித்த, தி.மு.க., எதிர்க்கவில்லை.
இறந்தவர்கள், நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தோர் ஓட்டுகளை நீக்கவும், தகுதி இருந்தும் ஓட்டு இல்லாதவர்களை சேர்க்கவும், எஸ்.ஐ.ஆர்., வாய்ப்பு வழங்குகிறது.
சென்னையில் ஆர்.கே.நகர், ராயபுரம், தி.நகர் தொகுதிகளில், சோதனை முயற்சியாக, அ.தி.மு.க., சார்பில், வாக்காளர் பட்டியலை சரிபார்த்தோம்.
ராயபுரம் தொகுதியில் மட்டும் 10 ஓட்டுச்சாவடியில், இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் என, 1,700 போலி ஓட்டுகள் இருப்பது தெரியவந்தது.
எஸ்.ஐ.ஆர்., பணிகளை, அரசு அலுவலர்கள் சரியாக செய்கின்றனரா என்பதை, அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்கள் கண்காணிக்க முடியும். அப்படியிருக்கும்போது, தி.மு.க., ஏன் அச்சப்பட வேண்டும்? கள்ள ஓட்டுகளை நம்பியிருப்பதால், தி.மு.க., எதிர்க்கிறது.
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாக, தி.மு.க., கூறுகிறது; எஸ்.ஐ.ஆர்., வேண்டும் என, அ.தி.மு.க., சார்பில் நீதிமன்றம் செல்வோம். எஸ்.ஐ.ஆருக்கும், பா.ஜ.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

