ADDED : அக் 26, 2026 10:04 PM
அரசியல் விமர்சனம் என்ற பெயரில், கடவுள் ராமரையும், ராமாயணத்தையும் இழிவுபடுத்தும் வகையில், தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் திண்டுக்கல் லியோனி, பேசியது கடும் கண்டனத்திற்குரியது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கும், அரசியலுக்காக ஹிந்துக்களின் மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதற்கும் இடையே வேறுபாடு உள்ளதை அவர் உணர வேண்டும்.
‘ஸ்டாலினின் செருப்பு தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறது’ என, ராமாயண பாத்திரங்களோடு தொடர்புபடுத்தி பேசுவது, பொருத்தமற்ற அரசியல் ஒப்பீடு. ஸ்டாலின், ராமரும் அல்ல; விஜய் பரதனும் அல்ல. இருவருக்கும், ராமாயணத்தில் வரும் ராமர் – பரதன் உறவை போல, உறவும் இல்லை. அரசியல் விமர்சனத்திற்காக, இதிகாச புனித பாத்திரங்களை பயன்படுத்துவது, தேவையற்ற சர்ச்சைகளுக்கு வழி வகுக்கும். தன் பேச்சுக்கு திண்டுக்கல் லியோனி மன்னிப்பு கேட்க வேண்டும்.
– ராம ரவிக்குமார்
தலைவர், ஹிந்து தமிழர் கட்சி
