எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஸ்டாலின் கடும் தாக்கு
எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஸ்டாலின் கடும் தாக்கு
UPDATED : ஜன 28, 2025 11:07 PM
ADDED : ஜன 28, 2025 11:05 PM

விழுப்புரம் : சில எதிர்க்கட்சி தலைவர்கள், நம் மீது குறைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அது, ஆட்சியின் குறை இல்லை; அவர்கள் சிந்தனையின் குறைபாடு,'' என, முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
விழுப்புரத்தில், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவரங்கம், சமூக நீதி போராளிகள் மணிமண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்து, 231 திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், 324 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் பேசினார்.
அவர் கூறியதாவது:
இங்கே, 21 சமூக நீதி போராளிகளுக்கு நினைவு மண்டபம் திறக்கப்பட்டுள்ளது. வன்னிய சமுதாய மக்கள், சமூக நீதி உரிமை கேட்டு, 1987ல் போராடிய போது, சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் கோரிக்கைக்கு, அ.தி.மு.க., அரசு செவிமடுக்கவில்லை.
ஆனால், 1989 தேர்தல் அறிக்கையில், வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்குவோம் என்று, கருணாநிதி அறிவித்தார். ஆட்சிக்கு வந்த, 43வது நாளில், 20 சதவீத இடஒதுக்கீட்டை உருவாக்கிக் கொடுத்தார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் படித்து, வேலைக்குச் சென்று முன்னேற, அந்த ஒதுக்கீடு முக்கிய காரணம்.
தி.மு.க., ஆட்சியில் தான், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, 25 சதவீதம் இட ஒதுக்கீட்டை, 31 சதவீதமாக உயர்த்தினோம். பட்டியலின மக்களின் இட ஒதுக்கீட்டை 18 சதவீதமாகவும், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் தனியாக இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.
வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கொடுத்தோம். முஸ்லிம்களுக்கு, 3.5 சதவீதம், அருந்ததியினருக்கு, 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கினோம்.
நமக்கு நிதி ஒன்றுதான் தடையாக இருக்கிறது. ஆனாலும், நிதியில்லை என புலம்பிக் கொண்டிருக்காமல், மக்கள் குறைகளை நீக்கும் அரசாக, தி.மு.க., ஆட்சி செயல்படுகிறது.
சில எதிர்க்கட்சி தலைவர்கள், குறைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அது, ஆட்சியின் குறை இல்லை; அவர்கள் சிந்தனையின் குறைபாடு. தானும் நல்லது செய்ய மாட்டார்கள்; அடுத்தவர்களையும் செய்ய விட மாட்டார்கள்.
'நம்பர் ஒன் முதல்வர்' என்பதைவிட, 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்பதே என் இலக்கு. ஆதிக்க சக்திகள் தலைதுாக்க ஒருபோதும் விடமாட்டோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.