ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது; ஸ்டாலின்
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது; ஸ்டாலின்
ADDED : டிச 13, 2024 10:14 PM

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது, மக்களாட்சிக்கு விரோதமானது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
இது குறித்து தி.மு.க., தொண்டர்களுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதன் சுருக்க விவரம் வருமாறு;
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடத்தப்பட்ட அதே நாளில், ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் ஜனநாயக விரோதத் திட்டத்திற்கு மத்திய பா.ஜ., அமைச்சரவை ஒப்புதல் அளித்துக் கொடுங்கோன்மைக்கு வழி வகுக்க நினைக்கிறது.
நடைமுறைச் சாத்தியமில்லாத - மக்களாட்சி முறைக்கு விரோதமான - கூட்டாட்சித் தத்துவத்தைக் குற்றுயிராக்கும் ஒரே நாடு - ஒரே தேர்தல் முறைக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. வைக்கம் விழாவில் பேசிய கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், மாநிலங்களின் சுய மரியாதைக்காக நாம் எழுந்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். சுயமரியாதை இயக்கம் கண்டு அதன் வழியாகத் திராவிட இனத்தின் சுய மரியாதையை மீட்ட ஈ.வெ.ரா.,வின் வழியில், மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. நூறாண்டுகள் கடந்தாலும் நமக்கான போராட்டங்கள் தொடர்கின்றன.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அதில் கூறி உள்ளார்.