தி.மு.க.,வின் தோல்விக்கு யார் காரணம்? போட்டு உடைத்தார் ஸ்டாலின்
தி.மு.க.,வின் தோல்விக்கு யார் காரணம்? போட்டு உடைத்தார் ஸ்டாலின்
UPDATED : ஆக 29, 2011 03:46 PM
ADDED : ஆக 28, 2011 11:16 PM

சென்னை:''தி.மு.க.,வின் தோல்விக்கு பெண்கள் தான் காரணம்'' என்று, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.
ரமலான் தினம் வருவதையொட்டி, ஆர்.கே.நகர் பகுதி தி.மு.க., சார்பில், இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று நடந்தது.
இதில் ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க., அரசில் தான், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நாள்தோறும் வழங்கப்பட்டு வந்தன. நபிகள் நாயகம் முஸ்லிம் சமுதாயத்திற்காக பாடுபட்டவர் என்பதை நாம் மறந்துவிட முடியாது. இதுகுறித்து அண்ணாதுரை, 'முஸ்லிம் சமுதாயம் மதம் அல்ல மார்க்கம்' என்றார். மார்க்கம் என்பது லட்சியத்தை அடையும் வழி. பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். அதில் ஜெயலலிதாவுக்கு பங்கு உண்டு என்று நினைக்க வேண்டாம். அதில் அவர் விதிவிலக்கு.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் பெண்கள் இருக்கின்றனர். எங்களின் வெற்றிக்கும் சரி, தோல்விக்கும் சரி, காரணம் நீங்கள் தான். தோல்வி வந்ததால் சோர்ந்து மூலையில் உட்கார்ந்து விடாமல், வெற்றி, தோல்வி இரண்டையும் ஒன்றாகக் கருதி உங்களுக்காகவும், இந்த நாட்டிற்காகவும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் உண்மையான தி.மு.க., தொண்டர்கள்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தேசிய லீக் கட்சியின் பொது செயலர் அப்துல்காதர், மேயர் சுப்ரமணியன், தி.மு.க., அமைப்பு செயலர் இளங்கோவன் எம்.பி., துணை பொதுச் செயலர் சற்குணபாண்டியன் கலந்து கொண்டனர். விழாவில், 21 லட்ச ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.