ஜல்லிக்கட்டு பார்க்க 17ல் மதுரை செல்கிறார் ஸ்டாலின்
ஜல்லிக்கட்டு பார்க்க 17ல் மதுரை செல்கிறார் ஸ்டாலின்
ADDED : ஜன 14, 2026 03:56 AM

சென்னை: ஜல்லிக்கட்டு பார்க்க, 17ம் தேதி மதுரை செல்லவிருப்பதாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
பொங்கல் திருநாள் என்பது, தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில், ஜாதி பேதம் கிடையாது; மத வேறுபாடுகள் கிடையாது. ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது. பெண், ஆண் என்ற பாகுபாடு கிடையாது. எல்லாருக்குமான திருநாள் பொங்கல்.
தமிழ் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில், மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும், பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாக கொண்டாடப்படுகிற நாள்.
விவசாயிகளுடைய உழைப்பின் விளைச்சலையும், அதற்குரிய பலன்களையும் அதிகமாக்கி இருப்பதால், அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது.
தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றான, ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வை பார்ப்பதற்கு, வரும், 17-ம் தேதி மதுரை அலங்காநல்லுாருக்கு நேரில் செல்கிறேன்.
தமிழர்களின் கலைத்திறனை காட்டும் பாரம் பரிய கலைகள் அரங்கேறும் சென்னை சங்கமம் நிகழ்வையும், இன்று துவக்கி வைக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

