UPDATED : டிச 18, 2025 01:57 AM
ADDED : டிச 18, 2025 01:56 AM

வரும் சட்டசபை தேர்தலில், முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும், தொகுதி மாறி போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து, ஆளுங்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: சென்னை கொளத்துார் சட்டசபை தொகுதியில், மூன்றாவது முறையாக போட்டியிட்டு, முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் சைதை துரைசாமியை விட கூடுதலாக 2,734 ஓட்டுகள் பெற்று, ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், கொளத்துாரில் மீண்டும் களமிறங்கிய ஸ்டாலின், அ.தி.மு.க., வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரனை விட 37,730 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
சொந்த தொகுதி
பின், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மூன்றாவது முறையாக போட்டியிட்டு, அ.தி.மு.க., வேட்பாளர் ஆதிராஜாராமை விட கூடுதலாக 70,000த்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்றார்.
கடந்த தேர்தலில் கூடுதல் ஓட்டுகளை பெற்று கொளத்துார் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றதோடு, கடந்த நான்கரை ஆண்டுகளில் அவர் தன் சொந்த தொகுதிக்கென ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி இருக்கிறார்.
முதல்வராக இருந்தாலும், மாதம் ஒரு முறையாவது தொகுதிக்கு செல்லாமல் இருந்ததில்லை; தொகுதி மக்களின் குறைகளை கேட்டு அவற்றை உடனடியாக செய்து கொடுப்பதற்காக, கட்சி நிர்வாகிகளை நியமித்தார்.
முதல்வரின் தொகுதி என்பதால், சென்னை மேயர் பிரியாவும், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் அடிக்கடி கொளத்துார் தொகுதிக்குள் வலம் வந்தனர்; பல்வேறு நிகழ்வுகளை ஒட்டி, தொகுதி முழுதும் காலை முதல் இரவு வரை தினந்தோறும் அன்னதானமும் செய்தனர்.
இதெல்லாம் தி.மு.க.,வுக்கும், முதல்வருக்கும் சாதகமான சூழலாக இருந்தாலும், சமீபத்தில் தொகுதிக்குள் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள், தி.மு.க., தரப்புக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளன.
இவை தவிர, வரும் சட்டசபை தேர்தலில், விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் ரேஸில் குதிப்பதால், அதை எதிர்கொள்ள, முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுதும் கட்சிக்காக தீவிர பிரசாரம் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், பெரிய தொகுதியான கொளத்துார் தொகுதியை விட்டுவிட்டு, வேறு பாதுகாப்பான, சிறிய தொகுதியில் போட்டியிட ஸ்டாலின் தீர்மானித்துள்ளார்.
யோசனை
இதற்கு ஏற்ற தொகுதியை தேடியபோது, சென்னையின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பாதுகாப்பானது என, கட்சியின் மூத்த தலைவர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக இருக்கும் துணை முதல்வர் உதயநிதி, அந்த தொகுதிக்கென நிறைய பணிகளை செய்து கொடுத்திருப்பதோடு, தொகுதியில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் அதிகம் வசிப்பதால், அங்கு தி.மு.க., சார்பில் யார் போட்டியிட்டாலும், எளிதில் வெற்றி பெறுவர் என்ற தகவலும் ஸ்டாலினிடம் சொல்லப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து, வரும் தேர்தலில் சேப்பாக்கம் -- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட, முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்டுகிறார்.
இதற்கிடையில், முதல்வர் தொகுதி மாற விரும்புவதால், தற்போது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருக்கும் உதயநிதி, தன் தாத்தா கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூருக்கு செல்லும் யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, திருவாரூரில் இரு முறை போட்டியிட்டு கருணாநிதி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

