ADDED : மார் 17, 2024 06:58 AM
சென்னை : காங்கிரஸ் எம்.பி., ராகுலின் பாரத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் இன்று மும்பை செல்கிறார்.
பாரத ஒற்றுமை நியாய யாத்திரை பெயரில், 2வது கட்ட யாத்திரையை, ராகுல் ஜன., 14ல், வடகிழக்கு மாநிலங்களில் துவக்கி, பல மாநிலங்களை கடந்து இன்று மும்பையில் நிறைவு செய்கிறார். இதன் நிறைவு விழா மும்பை சத்ரபதி சிவாஜி மைதானத்தில் நடக்கிறது. இதில், இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை பயணியர் விமானத்தில் 9:40 மணிக்கு மும்பை புறப்பட்டு செல்கிறார். மாலையில் நடக்கவுள்ள விழாவில் பங்கேற்ற பின், இரவு 9:00 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்டு, 11.00 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
இதற்கிடையில், ராகுலின் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதன் மற்றும் முன்னாள் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களும் மும்பை செல்கின்றனர்.
மும்பையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலை, தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் சந்தித்து பேசுகின்றனர். தொகுதி பங்கீடு தொடர்பாகவும், வேட்பாளர் தேர்வு தொடர்பாகவும் அப்போது ஆலோசனை நடத்துகின்றனர்.
முதல்வர் ஸ்டாலினை, கே.சி.வேணுகோபால் சந்தித்து, காங்கிரஸ் விரும்பும் தொகுதிகள் குறித்து இறுதி கட்ட பேச்சு நடத்தவும் திட்டமிட்டுள்ளார் என, அக்கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

