வெளிச்சத்துக்கு வந்த ஸ்டாலினின் பொய்முகம்: பழனிசாமி பதிலடி
வெளிச்சத்துக்கு வந்த ஸ்டாலினின் பொய்முகம்: பழனிசாமி பதிலடி
ADDED : ஜன 24, 2025 06:57 AM

சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: தி.மு.க., அரசின் அவலங்களை, எதிர்க்கட்சித் தலைவராக சுட்டிக் காட்டினால், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி ஆகியோர், என் மீது வன்மத்தை கக்குகின்றனர்.
இதிலிருந்து, மக்கள் பணியில், சரியான பாதையில் பயணிப்பதை உணர்கிறேன்.
கடந்த 22ம் தேதி, சிவகங்கையில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'திண்ணையில் உட்கார்ந்து வெட்டிப்பேச்சு பேசுவது போல, வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சித் தலைவர் பேசலாமா' எனக் கேட்டுள்ளார்.
அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஒவ்வொரு ஊரிலும் திண்ணையில் அமர்ந்து கொண்டு, 'போட்டோ ஷூட்' நடத்தியதையும், புகார் பெட்டி வைத்து நாடகமாடியதையும், மக்கள் இன்னும் மறக்கவில்லை.
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, 525 வாக்குறுதிகளை தி.மு.க., கொடுத்தது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும், 'நீட்' தேர்வு ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகக் கூறிய ஸ்டாலின், சிவகங்கையில் பேசும்போது, 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் எனக் கூறியுள்ளார். இதிலிருந்தே முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் ஸ்டாலினின் பொய்முகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
கனிமவளக் கொள்ளையை அம்பலப்படுத்திய, அ.தி.மு.க., நிர்வாகி ஜெகபர் அலி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு காரணமானவர்களை கைது செய்யாமல், வழக்கை திசை திருப்ப காவல்துறை முயற்சிக்கிறது.
எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காமல், குற்றச்செயலை மடைமாற்ற, 'காப்பி பேஸ்ட்' செய்து அறிக்கை வெளியிட்டதாக சொல்வது வெட்கக்கேடானது.
நான் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறன். அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிடுகிறேன். அதுபோல, உங்கள் ஆட்சியில், எத்தனை வளர்ச்சிப் பணிகளை தி.மு.க., கொண்டு வந்தது என, ஸ்டாலின் சொல்லட்டும்.
தி.மு.க., அரசுக்கு தைரியம் இருந்தால், தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை, வெளிநாட்டு முதலீடுகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.