ADDED : ஜூலை 19, 2025 05:47 PM

நாகை : '' ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசாக மாறிவிட்டது,'' என நாகையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கூறினார்.
மக்கள் எண்ணப்படி
'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' பிரசாரப் பயணத்தில் நாகையில் அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு ஊராக செல்கிறார். எதற்காக போகிறார் என தெரியவில்லை. ஏதாவது செய்திருந்தால் மக்கள் வரவேற்பார்கள். தி.மு.க., ஆட்சிக்கு வந்து 50 மாதங்களில் நாகை மாவட்டத்திற்கு ஏந்தவொரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இதனால், மக்களை பார்க்காமல் முதல்வர் சென்றுவிட்டார். மக்கள் எண்ணப்படியும், அவர்கள் விரும்பியபடியும் அ.தி.மு.க., ஆட்சி இருந்தது.
ஒரு ஆட்சி வருவது சாதாரண விஷயம் கிடையாது. ஆட்சியில் அமர்ந்த பிறகு, மக்களை சிந்திக்க வேண்டும். ஆனால், முதல்வருக்கு வீட்டு மக்களை பற்றி மட்டுமே சிந்தனை உள்ளது. எப்போதும், வீட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும். என்ன அதிகாரம் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளதே தவிர, நாட்டு மக்களை பற்றி கவலைப்படவில்லை. ஓட்டு போட்ட மக்களை சந்திக்கவில்லை.
அதிகார மையங்கள்
ஸ்டாலின் குடும்பத்தில் நான்கு அதிகார மையங்கள் உள்ளன. ஒரு அதிகார மையம் இருந்தாலே தாக்கு பிடிக்க முடியாது. ஒன்று முதல்வர். இரண்டாவது அவரது மனைவி,. மூன்றாவது மகன். நான்காவது மருமகன். நான்கு பேரும் தமிழகத்தை 50 மாதமாக தமிழகத்தை ஆட்டி படைத்து வருகின்றனர். இதற்கு முடிவு கட்டும் வகையில் 2026 சட்டசபை தேர்தல் இருக்கும். 4 அதிகார மையத்தின் கீழ் தான் ஆட்சி நடக்கிறது. அ.தி.மு.க., ஆட்சியில் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டனர். நிர்வாகம் சிறப்பாக இருந்தது. மக்களுக்கான திட்டங்கள் உடனுக்கு உடன் கிடைத்தன.
தி.மு.க., ஆட்சிக்கு வரும் போது எல்லாம் விலைவாசி உயரும். இன்று விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. மக்களுக்கு வருமானம் குறைந்துவிட்டது. செலவு அதிகரித்துவிட்டது. மக்கள் துன்பப்படுகிறார்கள். இதைப் பற்றி முதல்வருக்கு கவலையில்லை. இதுவெல்லாம் முதல்வருக்கு தெரியாது.
என்ன ஆனது
நிர்வாக திறமையற்ற முதல்வரால் விலைவாசி உயர்ந்துவிட்டது. நாட்டில் நடப்பது தெரியாதவராக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயரவில்லை. நான்கு வருடங்கள் கழித்து தான் மக்களை சிந்தித்துள்ளார். நான்கு வருடம் உங்களுடன் இல்லை. குடும்பத்துடன் இருந்துள்ளார். மக்களை ஏமாற்றுகிறார்.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது, மனுக்கள் வாங்கினார். அது என்ன ஆனது.
முற்றுப்புள்ளி
மாணவர்கள் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு சோதனை வரும் போது எல்லாம் துணையாக இருந்துள்ளோம். அ.தி.மு.க., ஆட்சியில் 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 7 சட்டக்கல்லூரி,21 பாலிடெக்னிக்,67 கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாண்மை கல்லூரி மற்றும் ஐடி ஏற்படுத்தி கொடுத்தோம். மாணவர்கள், இளைஞர்கள் எங்களை நினைக்க வேண்டும். ஸ்டாலின், நடித்தது போதும், மக்களை ஏமாற்றியது போதும். சட்டசபை தேர்தலில் உங்கள் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசாகி விட்டது. இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.