எஸ்.ஐ.ஆர்., பணி எதிரொலி: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நிறுத்தம்
எஸ்.ஐ.ஆர்., பணி எதிரொலி: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நிறுத்தம்
UPDATED : நவ 24, 2025 12:55 AM
ADDED : நவ 24, 2025 12:23 AM

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியால், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் அவசரகதியில் முடிக்கப்பட்டன. எனவே, அவற்றில் பெறப்பட்ட மனுக்கள் என்னவாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு துறைகளின் நலத்திட்டங்கள், சேவைகளை பெற, மக்கள் மனு அளிப்பதற்கு நிலையான வழிமுறை உள்ளது. இவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது, அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை.
அதனால், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, குறைதீர் முகாம்கள் வெவ்வேறு பெயர்களில் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், தமிழக அரசு, 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் முகாம் நடத்தி, அதில் பொது மக்களிடம் மனுக்களை பெற்று, குறிப்பிட்ட நாட்களில் தீர்வு காணப்படும் என, ஜூலை மாதம் அறிவித்தது.
எதிர்பார்ப்பு அதன்படி, நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகள், 43 சேவைகள், ஊரக பகுதிகளில் 15 துறைகள், 46 சேவைகள் தொடர்பாக, பொதுமக்கள் மனு அளிக்கலாம்.
ஜூலை 15ல் துவங்கி நவம்பர் வரை, 10,000 முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டது.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், அவ்வப்போது அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் கீழ், குறுவட்டத்துக்கு ஒரு இடம் என்ற அடிப்படையில் முகாம்கள் நடத்தப்பட்டன.
இவற்றில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.
குறிப்பாக, வருவாய் துறை அதிகாரிகள் வழக்கமான பணிகளை நிறுத்தி விட்டு, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடத்துவதில் கவனம் செலுத்தினர். அரசு திட்டமிட்டபடி, நவம்பர் இறுதிவரை முகாம்களை நடத்தி இருக்க வேண்டும்.
ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி துவக்கப்பட்டதால், முகாம்கள் அவசர அவ சரமாக அக்டோபர் இறுதி யிலேயே முடிக்கப்பட்டன. தற்போது, முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கால அட்டவணை இதுகுறித்து, வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
நவம்பர் மாதம் வரை 10,000 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நவ., 14 வரை பெரும்பாலான மாவட்டங்களில் கால அட்டவணை தயாரிக்கப்பட்டது.
ஆனால், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி அக்டோபர் இறுதியில் துவக்கப்பட்டது. இதனால், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் முடிக்கப்பட்டன.
முகாம்களில், மாவட்டத்துக்கு தலா 50,000 மனுக்கள் வரை பெறப்பட்டன. இதில், 10 சதவீத மனுக்களுக்கு முகாம்களிலேயே தீர்வு காணப்பட்டு விட்டது.
அடிப்படை விபரங்கள் தவறு உள்ளிட்ட காரணங் களால், மாவட்டத்துக்கு தலா 15,000 மனுக்கள் வரை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. எஞ்சிய மனுக்கள் ஆய்வு நிலையில் உள்ளன.
இவற்றை ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்க, 60 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, வாக்காளர் பட்டியல் பணிகள் முடிந்த பிறகே அதில் கவனம் செலுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

