மாநில சுயாட்சி : மீண்டும் கையில் எடுத்தது தி.மு.க.,
மாநில சுயாட்சி : மீண்டும் கையில் எடுத்தது தி.மு.க.,
UPDATED : ஏப் 16, 2025 12:09 AM
ADDED : ஏப் 15, 2025 11:09 PM

சென்னை, ஏப். 16- 'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' என்ற பழைய கோஷத்தை, தி.மு.க., மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த இரண்டு ஆண்டுகளில் துவங்கப்பட்ட தி.மு.க., ஆரம்பத்தில் இருந்தே தனிநாடு கோஷத்தை எழுப்பி வந்தது. சீனாவுடன் நடந்த 1962 போருக்கு பின், அரசியல் சாசனத்தில் 16வது திருத்தம் செய்யப்பட்டு, தனிநாடு கேட்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. அதோடு தனிநாடு கோஷத்தையும், சுய நிர்ணய உரிமை முழக்கத்தையும், தி.மு.க., கைவிட்டது.
அண்ணாதுரை மறைவை தொடர்ந்து, 1969ல் முதல்வர் பொறுப்பை ஏற்ற கருணாநிதி, மத்திய - மாநில உறவு குறித்து ஆராய, ராஜமன்னார் குழுவை நியமித்தார். இரண்டு ஆண்டுகளில் அந்தக் குழு அறிக்கை அளித்தது.
அதை தொடர்ந்து, 1974ல் மாநில சுயாட்சி கோரும் தீர்மானம், முதல் முறையாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகியவற்றுடன், தி.மு.க., கூட்டணி அமைக்க துவங்கிய பின், சுயாட்சி கோஷம் அமுங்கி போனது.
இப்போது, மத்திய அரசுடனும், கவர்னருடனும் தினமும் ஒரு பிரச்னை உருவாகி, சட்டப் போராட்டம் வரை செல்வதை அடுத்து, பழைய கோஷத்துக்கு புத்துயிர் கொடுத்துள்ளது அக்கட்சி.
“மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கவும், மத்திய, மாநில உறவுகளை மேம்படுத்தவும், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.
''இக்குழு ஜனவரி மாதம் இறுதிக்குள், இடைக்கால அறிக்கையையும், இரண்டு ஆண்டுகளில் இறுதி அறிக்கையையும் அரசுக்கு வழங்கும்,” என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நேற்று தெரிவித்தார்.
சபை விதி 110ன் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:
அம்பேத்கர் தலைமையில், அரசியல் அமைப்பை உருவாக்கியவர்கள், கூட்டாட்சி கருத்தியலை கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக நாட்டை உருவாக்கினர்.
ஆனால் இன்று, மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே, மத்திய அரசிடம் போராடி பெற வேண்டிய நிலை உள்ளது.
மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக இருந்தால் தான், அவை வளர்ச்சி அடையும்; இந்தியாவும் வலிமை பெறும். இதை உணர்ந்தே, 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்ற கொள்கை முழக்கத்தை முழங்கி வருகிறோம்.
எனினும், மாநில பட்டியலில் உள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நீதி போன்றவற்றை, மத்திய அரசின் பொதுப்பட்டியலுக்கு மாற்றும் வேலையே அடுத்தடுத்து நடக்கிறது. அதன் தொடர்ச்சியே, 'நீட்' தேர்வு, மருத்துவ கல்வி சேர்க்கை, தேசிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கை திணிப்பு போன்றவை.
தொடர்ந்து மாநில உரிமைகள் பறிக்கப்படும் நிலையில், மத்திய - மாநில அரசுகளின் உறவுகளை மேம்படுத்த, அரசமைப்பு சட்டத்தின் விதிகளை ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, மாநில திட்டக்குழு முன்னாள் துணை தலைவர் நாகநாதன் ஆகியோர் இப்பணியை செய்வர். குழு, தன் இடைக்கால அறிக்கையை ஜனவரிக்குள்ளும், இறுதி அறிக்கையை, இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்கும்.
அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காத்திடவே, இந்த முயற்சியை எடுத்துள்ளோம். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் முழக்கத்தை செயல்படுத்தி, மக்களாட்சி தத்துவத்தை, இந்திய நாட்டில் முழுமையாக மலரச் செய்வோம்.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.
'பிரிவினைவாதத்தை துாண்டுகிறார் முதல்வர்'
“தனித் தமிழ்நாடு, தனிக்கொடி வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். பிரிவினைவாதத்தை துாண்டுகிறார்,” என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:மாநிலங்களை பிரிக்க வேண்டும் என, பிரிவினைவாதத்தை முதல்வர் துாண்டுகிறார். இந்திய நாடு வல்லரசாக வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. தனித் தமிழ்நாடு வேண்டும்; தனிக்கொடி வேண்டும் என, முதல்வர் நினைக்கிறார்.
அதனாலேயே சட்டசபையில் மாநில சுயாட்சியை வலியுறுத்துவது போல, பிரிவினை வாதத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதை பா.ஜ., கண்டிக்கிறது.இந்தியா வல்லரசாக, அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்திய நாடு நிர்வாக வசதிக்காக, பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி, ஏதேனும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, தி.மு.க., நினைக்கிறது.இது மக்களுக்கும், நாட்டுக்கும் விரோதமான செயல். மக்கள் இதை சிந்தித்து, வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். பெண்களை அவதுாறாக, அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதுகுறித்து, கவன ஈர்ப்பு
தீர்மானம் கொடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.