மாநில 'டேட்டா' மையம் ரூ.349 கோடியில் தரம் உயர்வு
மாநில 'டேட்டா' மையம் ரூ.349 கோடியில் தரம் உயர்வு
ADDED : ஆக 20, 2026 01:29 AM
சென்னை: சென்னை பெருங்குடியில் உள்ள, மாநில, 'டேட்டா' மையம், 349 கோடி ரூபாயில், 'எல்காட்' நிறுவனத்தால் தரம் உயர்த்தப்பட உள்ளது.
தமிழகத்தில், தகவல் தொழில்நுட்ப சேவைகளை ஊக்குவிப்பதுடன், அரசு அலுவலகங்களுக்கு, கணினி உள்ளிட்ட சாதனங்களை, கொள்முதல் செய்து தரும் பணியை, 'எல்காட்' எனப்படும், தமிழக மின்னணு நிறுவனம் செய்கிறது.
சென்னை பெருங்குடியில் உள்ள, அந்நிறுவனத்தின் வளாகத்தில், தமிழக அரசின் 'மாநில டேட்டா மையம்' உள்ளது. கடந்த, 2011ல் அமைக்கப்பட்ட, மாநில டேட்டா மையம் - 1, 62 அடுக்குகள் கொள்ளளவுடன் செயல்பட்டு வருகிறது.
மாநில டேட்டா மையம் - 2, கடந்த 2020 முதல் செயல்பட்டு வருகிறது. அதன் கொள்ளளவு, 135 அடுக்குகள்.
இந்த தரவு மையங்கள், அரசு துறைகளுக்கு இடையிலும், அரசு மற்றும் மக்களுக்கு இடையிலும், அரசு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இடையிலும், இணையதள சேவைகளை வழங்குவதுடன், தகவல் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்கிறது.
மேலும், அரசின் முக்கிய மென்பொருட்கள் உள்ளிட்ட, 437க்கும் மேற்பட்ட அரசு இணைய சேவைகள், தரவு மையங்களால் வழங்கப்படுகின்றன. தற்போது, டேட்டா மையத்தை, அதிநவீன தொழில்நுட்பத்தில், 349 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்த 'எல்காட்' முடிவு செய்துள்ளது.
இந்த பணிக்கு மூன்று நிறுவனங்கள் விருப்பம் காட்டிய நிலையில், தகுதியான ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, தற்போது, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
