ADDED : பிப் 22, 2024 02:30 AM
சென்னை:மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைத்தல்; பல்கலை பதிவாளர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரித்தல் உட்பட, 12 மசோதாக்கள் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டன.
அதன் விபரம்:
கடந்த 2001ம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தில் உள்ள, மாநில நெடுஞ்சாலைகள் அதிகார அமைப்பு, நெடுஞ்சாலைகள் அதிகார அமைப்பு என்ற பதவிப் பெயர்களை முறையே, மாநிலத் தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாகி என மாற்றம் செய்ய, அரசு முடிவு செய்துஉள்ளது.
அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான மசோதாவை, அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்தார்
திடக்கழிவை திறம்பட சேகரிக்கவும், அறிவியல் சார்ந்த முறையில் அதை அகற்றவும், ஊராட்சிகள் மீது கடமை ஒன்றை ஏற்படுத்துவது அவசியம். அதற்காக, 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான மசோதாவை நேற்று அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்தார்
திறந்தவெளி சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளில் பொறுப்பற்ற முறையில், மலக்கசடு மற்றும் கழிவுநீரை அகற்றுவது, சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை முன்வைக்கிறது.
எனவே, கழிவு நீர் தொட்டியை வடிகட்டுவதும், மலக்கசடு, கழிவு நீர் ஆகியவற்றை எடுத்து செல்ல பயன்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதும், பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்வதும் உள்ளாட்சிகளின் கடமை. அதற்கான மசோதாவை அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்தார்
அ.தி.மு.க., எதிர்ப்பு
தமிழ்நாடு மருத்துவ மன்றம், 1914ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ பதிவு சட்டத்தின் வகைமுறைகளின் கீழ் நிறுவப்பட்ட, ஒரு சட்டமுறையான அமைப்பு. இதற்கான விதிகளை திருத்துவதற்கான மசோதாவை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலே, அ.தி.மு.க., எதிர்க்கிறது என, அக்கட்சி எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் தெரிவித்தார்
ஹிந்து சமய மற்றும் அறநிலை கொடைகள் சட்டத்தின் கீழ், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர், சமய நிறுவனங்களில் அறங்காவலர்களாக நியமிக்க தகுதியற்றவர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அவர்களை சமமாக கருத, சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்தார்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கு, அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு குறையாத வகையில், நிதி ஒதுக்க வழிவகை செய்யும் மசோதாவை அமைச்சர் கயல்விழி தாக்கல் செய்தார்
அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி ஓய்வு வயது, 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பல்கலைகளின் பதிவாளர்கள் ஓய்வு வயதை, 58ல் இருந்து 60 ஆக உயர்த்துவதற்காக, பல்கலை சட்டங்களை திருத்துவதற்கான மசோதாவை அமைச்சர் ராஜகண்ணப்பன் தாக்கல் செய்தார்
சென்னையில் பல போக்குவரத்து முகமைகளின் சேவைகளை மேம்படுத்தவும், நகர்ப்புற போக்குவரத்தில் எழுந்துள்ள புதிய சிக்கல்களை தீர்க்கவும், 2010ம் ஆண்டு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு சட்டத்தை திருத்தம் செய்வதற்கான மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்போல், பொதுத் துறையும், தனியார் துறையும் பங்கு கொள்ளும்படியான, நெடுஞ்சாலைகளின் வளர்ச்சிக்கு உரிய அதிகாரங்களுடன், 'தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம்' அமைப்பதற்கான மசோதாவை அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்தார்
எதிர்பாரா செலவு நிதிய திருத்த மசோதா; நிதி நிலை நிர்வாக பொறுப்புடைமை திருத்த மசோதா; ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் திருத்த மசோதா ஆகியவற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.