கனிமவள தொழில்களை அரசுடமையாக்க வேண்டும் * மார்க்சிஸ்ட் கோரிக்கை
கனிமவள தொழில்களை அரசுடமையாக்க வேண்டும் * மார்க்சிஸ்ட் கோரிக்கை
ADDED : பிப் 19, 2025 09:03 PM
சென்னை:'தாது மணல் விவகாரம் தொடர்பான அறிக்கையை, சட்டசபையில் சிறப்பு விவாதமாக முன்னெடுக்க வேண்டும். தாது மணல், கனிம வள தொழில்களை அரசுடமையாக்க வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், கடந்த பல ஆண்டுகளாக நடந்துள்ள சட்டவிரோத தாது மணல் கொள்ளை பற்றி, விரிவான விசாரணை மேற்கொண்ட உயர் நீதிமன்றம், 16 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பளித்துள்ளது.
அதில், அரிய தாது மணல் கொள்ளை நடந்திருப்பதை உறுதி செய்துள்ளதுடன், அரசியல்வாதிகள், அதிகாரிகள், சுரங்க நிறுவனங்கள் இடையிலான தொடர்பை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது; இது வரவேற்புக்குரியது.
திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், தாது மணல் எடுப்பதற்காக உரிமம் பெற்ற, 7 நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக, அணுசக்திக்கு தேவையான அரிய கனிமம் உள்ளிட்டவைகளை எடுத்து ஏற்றுமதி செய்துள்ளன.
பல லட்சம் கோடிகள் மதிப்பு வாய்ந்த இந்த அரிய கனிமங்களின் கொள்ளை, ஊடகங்களின் வாயிலாக அம்பலப்பட்டது. அதை தொடர்ந்து, நீதிமன்றமும், அரசும் குறிப்பிட்ட நிறுவனங்களின் கிடங்குகளை மூடியதுடன், பல்வேறு விசாரணை குழுக்களும் அமைக்கப்பட்டன.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கடற்கரை மணலுக்காக, ராயல்டி மற்றும் அபராதமாக மட்டும், 5,832 கோடியே 29 லட்சம் ரூபாய் வசூலிக்க உத்தரவிட்டுள்ளனர்.
அபராத தொகையை முழுமையாக வசூலிப்பதுடன், கிடங்குகளில் இருக்கும் தாதுக்களை ஒப்படைத்து, அதில் கிடைக்கும் லாபத்தையும் கஜானாவில் சேர்க்க வேண்டும். இவ்வாறு முறைகேடான தொழிலில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும்.
இவ்வழக்கு தொடர்பாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ககன்தீப்சிங் பேடி, சத்யபிரதா சாஹு மற்றும் வக்கீல் சுரேஷ் சமர்ப்பித்த அனைத்து அறிக்கைகளையும் சட்டசபையில் சமர்ப்பிப்பதுடன், இது தொடர்பான சிறப்பு விவாதத்தை முன்னெடுக்க வேண்டும். தாது மணல், கனிமவள தொழில்களை அரசுடமையாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

